முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
செந்துறை திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 18th May 2019 09:22 AM | Last Updated : 18th May 2019 09:22 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செந்துறையில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மார்ச் 30ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து திரெளபதியம்மன், அர்ச்சுனன், பீமன், தருமன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் நாள்தோறும் சிறு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் மக்கள் நலன்காக்க தினமும் மகாபாரத கதைகள் எடுத்து கூறப்பட்டது.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தா.பழூர் அருகேயுள்ள எடக்கண்ணி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலிலும், ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலிலும் தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.