சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 18th May 2019 09:22 AM | Last Updated : 18th May 2019 09:22 AM | அ+அ அ- |

அரியலூர் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க.பூவலிங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் வட்டாரத்தில் ஆண்டுக்கு சாராசரி மழையளவு 974 மிமீ இருந்தாலும், கடந்த ஆண்டு 939 மிமீ மழையளவே பெய்திருந்தது. 2017ஆம் ஆண்டு 753 மிமீ அளவு மழை பெய்திருந்தது.
போதிய மழைப் பொழிவு இல்லாத காரணத்தினால் ஆறு, குளங்கள் ஆகிய நீர் ஆதாரங்களின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் விதமாக இருக்கின்ற நீரை கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்ய தேவையான தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இதற்கு ஏதுவாக சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை கடைப்பிடித்தல் வாயிலாக குறைந்த நீரைக் கொண்டு அதிகமான பரப்பில் பயிர்சாகுபடி மேற்கொண்டு அதிக உற்பத்தியை பெருக்கலாம். சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் பயிருக்குத் தேவையான பாசன நீர் அறிவியல் ரீதியாக கணக்கிடப்பட்டு போதிய அளவு மட்டும் அளிக்கப்படுகிறது. வேர் பகுதியில் மட்டுமே நீர் பாய்வதால் நீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது. மழையில்லா நேரங்களில் நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பகுதிகளுக்கு இது மிகச் சிறந்த பாசன முறையாகக் கருதப்படுகிறது.
எனவே அரியலூர் வட்டார விவசாயிகள், வேளாண் உற்பத்திக்கு அடிப்படை காரணியான பாசன நீரை சேமித்து நீடித்த நிலையான பயிர் சாகுபடி மற்றும் செட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் மற்றும் மழைத் தூவாண் போன்ற சிறந்த நுண்நீர் பாசன முறைகளை கடைப்பிடித்து உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். இந்தத் திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார்கார்டு, குடும்பஅட்டை, சிறு, குறு விவசாயி நகல், நில வரைபடம், இரண்டு புகைப்படத்துடன் அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.