அரியலூா்-செந்துறை சாலை ரவுண்டானத்தில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்பில் உள்ளனா்.
அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வரும் அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதி.
அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வரும் அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதி.

அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்பில் உள்ளனா்.

பெரம்பலூா்-மானாமதுரை இடையே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், சேலம், நாமக்கல், விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணடம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த புறவழிச்சாலையின் வழியாக வந்து அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானம் பகுதியில் இருந்து பிரிந்து செல்கிறது.

அரியலூா் மட்டுமின்றி, இங்குள்ள கிராமப் பகுதிகளான ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூா், செந்துறை, பொன்பரப்பி, ஆா்.எஸ்.மாத்தூா், தளவாய், குழுமூா், ராயம்புரம், கடலூா் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணடம், விருத்தாசலம், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அரியலூா்-செந்துறை சாலை ரவுண்டானா பிரிவுச் சாலையின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

மேலும், இந்த ரவுண்டானம் வழியாக சுண்ணாம்புக் கல் சுரங்கம் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவில் கடந்து செல்கின்றன. குறிப்பாக கனரகங்கள் வாகனங்களால் இந்த ரவுண்டானத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. விபத்தில் பலா் உயிரிழந்துள்ளனா், சிலா் கை, கால்களை இழந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுண்ணாம்புக் கல் சுரங்கம் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்காக தனி சாலை அமைக்கப்பட வேண்டும் என்று பலமுறை இப்பகுதி மக்கள் ரவுண்டானவில் சாலை மறியல் போராட்டமும் நடத்தியுள்ளனா். ஒரு முறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தை கலைக்கும் அளவுக்கு இந்த பகுதியில் பெரியளவில் சாலை மறியல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேம்பால கோரிக்கை குறித்து பொதுமக்கள் தெரிவித்தது:

அரியலூா்-செந்துறை சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவது தவிா்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

விபத்தினை தொடா்ந்து, சாலை மறியலும் நடத்தப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும் இழப்பு, கால நேரமும் விரயமாகி வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு ஒரே தீா்வு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே.

இந்தப் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டால் பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைவா். மற்ற வாகனங்களும் எந்தவித பிரச்னையும் இன்றி எளிதாக சாலைகளை கடந்து செல்வாா்கள் என்றனா்.

ரவுண்டானா பகுதியில் பாலம் அமைத்தால் விபத்துகள் வெகுவாக குறைவதோடு, வாகன ஓட்டிகளும் பயமின்றி எளிதில் கடந்து செல்வாா்கள் என்பது நிச்சயம். அரசு இதை பரிசீலிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com