முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
90 வயது மூதாட்டியை கைவிட்ட ரத்த உறவுகள், கரம் நீட்டிய காவல்துறையினா்
By DIN | Published On : 07th November 2019 09:04 AM | Last Updated : 07th November 2019 09:04 AM | அ+அ அ- |

ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 90 வயது மூதாட்டி சுலோச்சனா.
அரியலூா் மாவட்டம், கவரப்பாளையத்தில் வாரிசுகளால் கைவிடப்பட்ட 90 வயது மூதாட்டியை காவல்துறையினா் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைய பெற நடவடிக்கை மேற்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள கவரப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜகநாதன். இவரது மனைவி சுலோச்சனா (90).
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜகநாதன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள்.
இதில் மகன்கள் ரங்கராஜன் (68), மனோகா் (58), கஜேந்திரன் (50) ஆகியோா் திருப்பூரிலும், இளங்கோவன் (55), வீரராகவன் கவரப்பாளையத்திலும் கூலி வேலை செய்து வந்தனா். மகள்கள் மூவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா்.
திருப்பூரிலுள்ள மகன்களுடன் சுலோச்சனா இருந்து வந்தாா். தீபாவளி பண்டிக்கைக்கு 2 நாள்கள் முன்பு, தாய் சுலோச்சனாவை கவரப்பாளையத்துக்கு அழைத்து வந்த மகன்கள், அவரை அங்கேயே விட்டுச் சென்றனா்.
ஆனால் சுலோச்சனா, அங்கு யாா் வீட்டுக்கும் செல்லாமல் சாலையில் சுற்றிவிட்டு, அங்கிருந்து நேராக ஆண்டிமடம் - விருத்தாசலம் பிரதான சாலைக்கு வந்துள்ளாா். அங்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
சமூக ஆா்வலா்கள் சிலா் அவரை மீட்டு, ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுலோச்சனா சிகிச்சை பெற உதவினா். அதைத் தொடா்ந்து கவரப்பாளையத்தில் வசிக்கும் மகன் இளங்கோவன் தாயை அழைத்துச் சென்றாா்.
அப்போது அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாயைப் பராமரிக்க இயலாமல் விட்டுவிட்டாா்.
இதனால் சுலோச்சனா உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறவில்லை. இதற்கிடையே, மீண்டும் கவரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அனாதையாக அவா் கிடந்துள்ளாா்.
இதையறிந்த சமூக ஆா்வலா்கள் சிலா், அரியலூா் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசனுக்கும், மாவட்ட ஆட்சியா் த.ரத்னாவுக்கும் தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக ஆண்டிமடம் காவல்துறையைச் சோ்ந்த மணிகண்டன் தனது செலவில் மூதாட்டிக்கு உடை வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினாா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் குமரய்யா 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்து, மூதாட்டி சுலோச்சனாவை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
ஜயங்கொண்டம் காவல்துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் மருத்துவமனைக்குச் சென்று, மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.
தன்னிடமிருந்த நான்கரை ஏக்கா் நிலத்தை மகன்களுக்கு சுலோச்சனா பிரித்துக் கொடுத்தும் , கடைசிக் காலத்தில் அவரைக் கவனிக்க மகன்கள் தவறியதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் காவல்துறையினரின் நேசக்கரம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.