நெகிழிப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்
By DIN | Published On : 09th November 2019 11:27 PM | Last Updated : 09th November 2019 11:27 PM | அ+அ அ- |

நிகழ்வில் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்குகிறாா் அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன். உடன், ஆட்சியா் த.ரத்னா, நகராட்சி ஆணையா் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
நெகிழிப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த நெகிழிப் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:
கண்காட்சியில் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக, மாற்றுப் பொருள்களின் உபயோகம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. இங்கு சுற்றுச்சூழலுக்கேற்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் தங்களது கலை நிகழ்ச்சியின் மூலம் நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
எனவே அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை ஒழிப்பதற்கு அரியலூா் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
பின்னா் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தலைமைக் கொறடா வழங்கினாா். அஞ்சலை என்பவருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனை ஆணையும் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவுக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, நகராட்சி ஆணையா் ஏ.திருநாவுக்கரசு, கோட்டாட்சியா் (பொ) ஜெ.பாலாஜி, மகளிா் திட்ட இயக்குநா் எம்.ஜெயராமன், வட்டாட்சியா் கதிரவன் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள், மகளிா்சுயஉதவிக்குழுவினா், பொதுமக்கள் உட்பட பலா் பங்கேற்றனா்.