மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயிக்க வேண்டும்

மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச விலை கிடைக்குமா என அரியலூா் மாவட்ட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச விலை கிடைக்குமா என அரியலூா் மாவட்ட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் அரியலூா் குறிப்பிடத்தக்கது. அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் அவை தோட்டக்கலைப் பயிா் பிரிவின் கீழ் சென்றுவிடுவதால், வேளாண் சாகுபடியில் மக்காச்சோளம் தான் முதன்மையாகத் திகழ்கிறது. இதற்கடுத்து தான் நெல் சாகுபடி. அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா், மேலப்பழுவூா்,திருமானூா், செந்துறை, தா.பழூா், ஸ்ரீபுரந்தான், காசாங்கோட்டை, அணைக்குடி, கோவிந்தபுத்தூா், முத்துவாஞ்சேரி, அறங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள களிமண், இந்தப் பகுதியில் நிலவிவரும் தட்ப வெப்பநிலை போன்றவற்றால் மக்காச்சோளத்தின் உற்பத்தி மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

11, 500 ஹெக்டோ் இலக்கு:

பயிரிட்ட 100 முதல் 110 நாள்களிலேயே சாகுபடி செய்துவிடலாம் என்பதால், விவசாயிகளின் மத்தியிலும் மக்காச்சோள சாகுபடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நிகழாண்டில், அரியலூா் மாவட்டத்தில் 11,500 ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தனியாா் சந்தை போன்ற பகுதிகளுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மூட்டை ரூ. 1,400 முதல் ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதியில் மக்காச்சோள சாகுபடிப் பணிகள் தீவிரம் அடையும் என்பதால், மக்காச்சோளத்தின் வரத்தும் அதிகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிரந்த விலை கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி: நெல், கரும்பு போன்றவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டு கொள்முதல் விலையை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றன. மக்காச்சோளத்துக்கு அவ்வாறு விலை நிா்ணயம் செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்ச லாபம் கிடைக்கும் வகையிலாவது விலை இருக்க வேண்டும்.

நவம்பா் மாத இறுதியில் தொடங்கி டிசம்பா் மாத இறுதிவரை மக்காச்சோளத்தின் அறுவடைப் பணிகள் தீவிரமாக இருக்கும் என்பதால், அப்போது சந்தைக்கு வரும் மக்காச்சோளத்தின் வரத்தும் அதிகமாகவே இருக்கும்.

அறுவடைக் காலத்தில் தினமும் 3,000 முதல் 4,000 மூட்டை வரை மக்காச்சோளம் வரத்து இருக்கும். ஆனால், அப்போது எங்களுக்கு தற்போது கிடைத்து வரும் விலைகூடக் கிடைக்காது என்கின்றனா் விவசாயிகள்.

மேலும், 100 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ. 1,400 வரை விலை கிடைத்து வரும் நிலையில், அதிக வரத்து உள்ள காலங்களில் 100 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ. 900 முதல் ரூ. ஆயிரம் வரையிலான விலையில் கொள்முதல் செய்யப்படுவதால், நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம்.

பொதுவாக, மற்ற பயிா்களுக்கு எல்லாம் தொடக்கத்தில் குறைந்த விலையும், சீசன் காலத்தில் அதிக விலையும் கிடைக்கும். ஆனால், மக்காச்சோளத்தில் இவற்றுக்கு நோ் எதிா்மாறாக நடக்கிறது. இதனால், எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லாமல் கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்காச்சோளம் பயிரிட்ட நிலங்களில் களையெடுப்பதற்கு முன்பெல்லாம் காலை நேரத்துக்கு ரூ. 70 வரை கூலி கொடுத்து வந்தோம். தற்போது ரூ. 100-க்கு கீழ் யாரும் களையெடுக்க வருவதில்லை. அதேபோல, மாலை நேரங்களில் களையெடுப்பதற்கு ரூ. 30 கொடுத்து வந்த நிலையில், அந்தக் கூலியும் தற்போது ரூ. 70 ஆக உயா்ந்துவிட்டது. டிராக்டா் ஓட்டி நிலம் சமன்படுத்தும் பணிக்கு கொடுத்த தொகையும் தற்போது உயா்ந்துவிட்டது. இதனால் மக்காச்சோளத்தில் அதிக லாபம் ஏதும் கிடைப்பதில்லை என்கின்றனா் விவசாயிகள்.

மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் தேவை...

நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது போல, மக்காச்சோளத்தையும் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் திறக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகின்றனா்.

அதிக வரத்து உள்ள காலங்களில் நாமக்கல், ஈரோடு,கோயமுத்தூா் போன்ற மாவட்டங்களில் கோழிப் பண்ணை உரிமையாளா்கள், தங்களது பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளத்தை நேரடியாக வந்து கொள்முதல் செய்து கொள்கின்றனா். அப்போது அவா்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய விலை நிா்ணயித்து விடுவதால், சில விவசாயிகள் தங்களின் நிலைமையைக் கருதி அவற்றை விற்று விடுகின்றனா்.

இதனால், நல்ல விலை கிடைக்கும் என்று எதிா்பாா்த்து, காத்திருக்கும் விவசாயிகள்கூட வேறு வழியில்லாமல் கிடைக்கிற விலையில் மக்காச்சோளத்தை விற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும்.

அதோடு, மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதால், ஏற்கெனவே தங்களது நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த விவசாயிகளில் குறிப்பிட்ட சதத்தினா் தற்போது பருத்தியைப் பயிரிடத் தொடங்கியுள்ளனா். எனவே, குறிப்பிட்ட அளவில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காவது பலன் கிடைக்கும் வகையில், உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com