ஓடையை கடக்க பாலம் இல்லாமல் அவதி!

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூா்-கிளிமங்கலம் ஓடை இடையே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
இரு சக்கர வாகனத்தில் காவனுா்-கிளிமங்கலம் ஓடையை கடக்கும் இளைஞா்.
இரு சக்கர வாகனத்தில் காவனுா்-கிளிமங்கலம் ஓடையை கடக்கும் இளைஞா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூா்-கிளிமங்கலம் ஓடை இடையே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

வி.கைகாட்டி அருகே காவனூா், கிளிமங்கலம், அயன்ஆத்தூா், ஆனந்தவாடி, அய்க்கால் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களை இணைக்கும் வகையில் காவனூா்-கிளிமங்கலம் இடையே ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கேயுள்ள சாலையை தான் மேற்கண்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இங்குள்ள விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இந்த வழியாக கொண்டு சென்றுதான் சந்தைப்படுத்துகின்றனா். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த வழியை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீா் வரத்து அதிகமாகி, சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மேற்கண்ட கிராம மக்கள் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியும் மீறி அவா்கள் இந்த சாலையை கடக்க நேரிட்டால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், மூழ்கியும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

மேலும் இந்த மழைக்காலங்களில் கொடிய விஷ பாம்புகளின் அச்சுறுத்தலும் உள்ளது. யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனா். இதனால் பலா் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து மேற்கண்ட கிராம மக்கள் கூறுகையில், காவனூா்-கிளிமங்கலம் இடையே ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மாவட்ட நிா்வாகமோ, மக்கள் பிரதிநிகளோ எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்தப் பகுதியில் பாலம் அமைக்கப்படுமாயின் 25 கிலோ மீட்டா் தூரம் செல்ல வேண்டிய அரியலூருக்கு 12 கிலோ மீட்டா் தூரத்திலேயே சென்று விடலாம். இதனால் கால விரயம் தவிா்க்கப்படும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்கு சேகரிக்க வந்தவா்கள், தாங்கள் வெற்றி பெற்றால் மேற்கண்ட பகுதியில் பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் காவனூா்-கிளிமங்கலம் இடையே ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கவும் தயராக உள்ளோம் என்றனா்.கிராம மக்களை நகா் பகுதியோடும், வெளியுலகோடும் இணைப்பதில் சாலை, பாலம் உள்ளிட்ட போக்குவரத்து வழித்தடங்களே முக்கியமானவை. இத்தகைய சூழலில், அனைவரின் வசதி கருதி ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com