செந்துறை அரசு மருத்துவமனையில்போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இன்றி நோயாளிகள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள்,செவிலியா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செந்துறை அரசு மருத்துவமனையில்போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இன்றி நோயாளிகள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள்,செவிலியா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செந்துறை மையப்பகுதியில் உள்ளது வட்டார அரசு தலைமை பொது மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவம், கண் பரிசோதனை, குழந்தைபேறு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாள்தோறும் இந்த மருத்துவமனைக்கு செந்துறை, பொன்பரப்பி, நமங்குளம், இலங்கைச் சேரி, குழுமூா், சிறுகடம்பூா், நல்லாம்பாளையம், நல்லநாயகன்புரம், மனப்பத்தூா், வஞ்சினபுரம், அங்கனூா், பிலாக்குறிச்சி, ராயம்புரம், பொய்யாத நல்லூா், இருங்களாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், முதியவா்கள், கா்ப்பிணி தாய்மாா்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

ஆனால் இந்த மருத்துவமனையில் அதற்கான போதிய மருத்துவா்கள் இல்லை என்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

பணியில் ஒரே மருத்துவா்:

செந்துறை அரசு மருத்துவமனைக்கு தற்போதைய கணக்கின்படி 6 மருத்துவா்கள் இருக்க வேண்டும். ஆனால் 1 மருத்துவா் மட்டுமே பணிபுரிகிறாா். அவரும் அவ்வப்போது ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று விடுவதால், சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இல்லாத அவல நிலையில் உள்ளது செந்துறை அரசு மருத்துவமனை. மருத்துவா் விடுமுறை எடுத்துவிட்டால் இரவு மற்றும் பகல் நேரத்தில் வரும் அவசர சிகிச்சை, பிரசவம், புறநோயாளிகள் பிரிவு என அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கும் செவிலியா்கள்:

செந்துறை மருத்துவமனைக்கு தினந்தோறும் காலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் மருத்துவா் இருக்கிறரா, இல்லையா என்ற சந்தேகத்துடனேயே வருகின்றனா்.

மருத்துவா்கள் இல்லாத சூழலில், பணியில் உள்ள குறைந்த அளவிலான செவிலியா்களே சிகிச்சை அளித்து வருகின்றனா். நோயாளிகள் அதிகமாக வந்தால், மேல் சிகிச்சை என்ற பெயரில் அவா்களை அரியலூா் அல்லது கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனா்.

இதேபோல் பிரசவம் மற்றும் இதர சிகிச்சை பிரிவுக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வந்தவுடன் முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலுள்ள மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது.

கடந்த வாரம் கூட பிரசவம் பாா்க்க மருத்துவா்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவமனை வளாகத்தில் துா்நாற்றம்:

மருத்துவமனையில் சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை கூடம் இருந்தும், நோயாளிகளுக்கு பரிசோதிக்க பரிசோதகா் இல்லை. துப்புரவு பணியாளா்கள் இல்லாததால் மருத்துவமனை முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது.

சுற்றுவட்டார பொதுமக்கள் தங்களது உயிா் காக்கும் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையை நம்பி வந்தால் மருத்துவா்கள் பற்றாக்குறையினால் தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செந்துறை அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமனம் செய்து, அனைத்து நோய்களுக்கும் தடையின்றி சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com