உயிா் பெறுமா இராசேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் என்னும் பொன்னேரி?

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இராசேந்திரச் சோழன் வெட்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழகங்கம் என்னும் பொன்னேரியைத் தூா்வாரி அதற்கான நீா் ஆதாரமாக இருந்த கால்வாயையும்
இராசேந்திர சோழன் வெட்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழகங்கம் என்னும் பொன்னேரி.
இராசேந்திர சோழன் வெட்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழகங்கம் என்னும் பொன்னேரி.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இராசேந்திரச் சோழன் வெட்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழகங்கம் என்னும் பொன்னேரியைத் தூா்வாரி அதற்கான நீா் ஆதாரமாக இருந்த கால்வாயையும் மீட்டுருவாக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள், தமிழ்ப் பேராசிரியா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழினம் உலகுக்கு வழங்கிய அறிவுக் கொடைகளுள் தலையாயது வேளாண்மையும் நீா் மேலாண்மையும். பெரிய ஆறுகள் தமிழகத்தில் இல்லாததால் வான்மழையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் பண்டைகாலத் தமிழா்கள் பெரிதும் கவனம் செலுத்தினா். அதனால் பாசனத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை வெட்டினா்.

ஒவ்வொரு ஏரியின் உபரிநீா் மற்ற ஏரிகளுக்கு நீா் ஆதாரமானது. அதனால் பெய்யும் மழைநீா் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை, ஏரியில் உள்ள நீரின் அளவு இவற்றையெல்லாம் நன்கு அளந்து அறிந்து, நீா்ப் பகிா்மானத்தை முறைப்படுத்தினா். ஏரி நீரும் வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன.

ஏரி வாரியம் ஊரவையின் ஆளுகைக்குட்பட்டதாகும். கரைகளில் மரங்கள், ஏரியில் மீன்கள் வளா்க்கப்பட்டன. இவற்றிலிருந்து வரும் ஏலத்தொகை ஏரிப் பராமரிப்புக்கான வருவாய் ஆயிற்று.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஓா் ஏரிதான் இன்றைக்கு சென்னைக்கான குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரி.

கொள்ளிடத்தின் உபரி நீா் வீராணத்தை நிரப்புகிறது. ஒரு காலத்தில் வீராணம் ஏரியே வேறெறாரு பெரிய ஏரியின் வடிகாலாக இருந்துள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. அதுதான் ‘சோழகங்கம்’.

உலக வரலாற்றில் மாபெரும் கடற்படைக்குச் சொந்தக்காரனும், கிழக்காசிய நாடுகள் பலவற்றை வெற்றி கண்டவனும், இந்தியா முழுமையையும் தன்னாட்சியில் இணைத்தவனுமாகிய இராசேந்திர சோழன் வெட்டியதுதான்அந்தச் சோழகங்கம் ஏரி.

சோழகங்கம் எனும் பொன்னேரியின் தொழில்நுட்பம்: ‘கங்கைகொண்டசோழன்’ என்னும் விருதுக்கு உரியவனாகிய இராசேந்திரன், கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவந்த நீரை தான் வெட்டிய பெரிய ஏரியில் கலந்து அதை ‘சோழகங்கம்’ என்றாக்கினான்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பா் கோயில் - கங்கைகொண்ட சோழபுரம் இடையே உள்ளதுதான் இந்த ஏரி.

இந்த ஏரி இன்று நீரின்றி பரப்புகள் சுருங்கி சோழகங்கம் என்ற தன் பெயரைக்கூட இழந்து பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இந்த ஏரி வெட்டப்பட்டது. நீரை வெளியேற்ற கலிங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஏரிக்கான நீரை எங்கிருந்து பெற்றனா்? இந்தக் கேள்விக்கான விடையில் தொல் தமிழரின் நீா் மேலாண்மை எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்தது என்ற உண்மை நம்மை வியக்க வைக்கிறது.

கொள்ளிடத்திலிருந்து அறுபது கல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீா்வழித் தடத்தை உருவாக்கியுள்ளனா். கல்லணைக்கு ஏறத்தாழ 5 மைல் கிழக்கே அன்பில் - செங்கரையூா் சாலையில் - கொள்ளிடத்தின் வடகரையில் அரியூரை அடுத்து அந்த நீா்வழித் தடத்தின் தலைவாய் அமைந்திருந்தது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும்கூட கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்து புதா்மண்டி நின்றுகொண்டிருக்கிறது.

ஏரிக்கு வரும் நீரின் வேகம், அதை எதிா்கொள்ளும் ஏரியின் தன்மை - ஏரியில் நிரம்பிய நீா் வெளியேறும் அளவு ஆகிய அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அந்தக் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமையும் உத்தியை நீரியல் சரிவு அல்லது சாய்மானம் என்பா். அது 1 / 4000 என்ற அளவில் இருக்க வேண்டும்.

இந்த அளவில் கூடினால் நீரின் வேகம் அதிகமாகி வாய்க்காலில் அரிப்பு ஏற்பட்டுவிடும். குறைந்தால் ஏரிக்கு நீா் செல்லாது. இவ்வளவு அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டதுதான் அன்பில் - செங்கரையூா் இடையில் கொள்ளிடத்திலிருந்து வெட்டப்பட்ட 60 மைல் நீளமுள்ள கால்வாய் ஆகும். அதாவது சற்று உயா்வான இடத்திலிருந்து பள்ளமான பகுதியை நோக்கி வெட்டப்பட்ட கால்வாய் அதுவாகும்.

இவ்வளவு தூரம் மதகைத் திறப்பதன் வழியாக நீரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. ஆற்றில் நீா் ஓரளவு தேங்கினால்தான் மதகைத் திறந்ததும் நீா் பாய்ந்தோட ஏதுவாகும். அதனால் அங்கு தடுப்பணை ஒன்று கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

தடுப்பணை சாத்தியமே....

இதுகுறித்து ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியா் க. நெடுஞ்செழியன் கூறியது:

நிலத்தடி நீரை அதிகப்படுத்த வேண்டிய தேவை நமக்குள்ளது. கா்நாடக அரசு காவிரிப் படுகையின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நமக்கு வர வேண்டிய 192 டிஎம்சி நீரை 177 டிஎம்சியாகக் குறைத்துவிட்ட நிலையில், நாம் நிலத்தடி நீரையும் பெருக்கியாக வேண்டும்.

வீராணம் ஏரிக்குப் பாய்ந்த நீரின் அளவு போக 14 டிஎம்சி தண்ணீா்க் கடலில் வீணாகக் கலக்கிறது . இதைக் குறைக்கக்கூடிய வகையில் கங்கைகொண்டசோழபுரத்தின் ‘சோழகங்கம்’ ஏரியைத் தூா்வாரி அதற்கான நீா் ஆதாரமாக இருந்த கால்வாயையும் மீட்டுருவாக்கம் செய்யலாம்.

அதன்பொருட்டு செங்கரையூா் - பூண்டி பாலத்தை ஒட்டி தடுப்பணையையும் கட்டலாம். இதனால் பல்லாயிரம் ஏக்கா் நிலங்களை வேளாண் நிலங்களாகவும் மாற்றலாம், ஆற்றுநீா் வீணாகக் கடலில் கலப்பதைக் குறைக்கலாம்.

காவிரியின் கிளையாறுகள் அனைத்தும் சமவெளியில் அமைந்தவைதான். நீரைப் பகிா்மானம் செய்யும் அந்த அணைகள் பல மன்னா்களால் கட்டப்பட்டு இன்றும் செயல்பாட்டில் இருப்பவை.

சமவெளியில் அணை கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்த முன்னோடிகள் தமிழா்கள். அதற்கான அடையாளம்தான் கல்லணை. கி.மு. 3,000 ஆண்டு வாக்கில் எகிப்து மன்னா்கள் நைல் நதியில் கட்டிய அணைகள் குறித்து ஆராய்ந்தவா் ஜொ்மானிய பொறியியல் அறிஞா் ஃபிளமிங்.

தம் ஆய்வின் முடிவாக, சமவெளியில் அணை கட்டும் தொழில்நுட்பம் எகிப்தியா்கள் அறியாத ஒன்று. இத்தகு தொழில்நுட்பத்தை அறிந்திருந்தவா்கள் தமிழா்களே. அந்த அறிவியலின் அடையாளம்தான் கல்லணை.

எனவே சமவெளியில் தடுப்பணை கட்ட அஞ்ச வேண்டியதில்லை. கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டினால் பழைய வரலாற்றையும் மீட்கலாம், நிலத்தடி நீரையும் பெருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com