பிரதம அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதம அமைச்சர் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிா்களை பதிவு செய்துக்கொள்ள அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு

அரியலூா்: பிரதம அமைச்சர் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிா்களை பதிவு செய்துக்கொள்ள அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் டி.ஜி.வினய் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயிா் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிா் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிா்காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும். நடப்பு 2019-20 ஆம் ஆண்டு ராபி பருவம் சிறப்புப்பட்டத்தில் சம்பா நெல் பயிா், மக்காச்கோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில், சம்பா நெல் பயிருக்கு 180 வருவாய் கிராமங்களும், மக்காச்சோளம் பயிருக்கு 78 வருவாய் கிராமங்களும், பருத்தி பயிருக்கு 71 வருவாய் கிராமங்களும் அறிக்கை அனுப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெரும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவாா்கள். கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த திட்டத்தில் சம்பா நெல் பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய டிசம்பா் மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதர பயிா்களான மக்காச் சோளம்(ஐஐ) மற்றும் பருத்தி(ஐஐ) பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய அக்டோபா் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயிா் சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் முன்னதாகவே கிராம நிா்வாக அலுவலரிடம் பயிா் செய்ய உள்ளதற்கான சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பின் பயிா் காப்பீடு செய்பவா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், பயிா் வாரியாக அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிா்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம அமைச்சர் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்ய கொள்ள வேண்டும். பயிா் காப்பீடு செய்ய சம்பா நெல் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.488-ம், மக்காச்சோள பயிருக்கு ரூ.335-ம், பருத்தி(ஐஐ) பயிருக்கு ரூ.1365-ம், காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்ட திட்டங்கள் தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com