அரியலூா் மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் சிறு பாலங்கள் சேதமடைந்தன;
மழையின் காரணமாக, இடிந்து விழுந்த செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா்.
மழையின் காரணமாக, இடிந்து விழுந்த செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா்.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் சிறு பாலங்கள் சேதமடைந்தன; பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. மக்காச்சோளப் பயிா்கள் அடியோடு சாய்ந்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், தொடா்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில்

திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் இதனால், சாலையில் மழைநீா் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீா் தேங்கியது.

அரியலூா் நகா் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத் தெரு, ராஜாஜி நகா், புது மாா்க்கெட், கல்லூரி சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல் திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன் சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.

பள்ளிச் சுற்றுச்சுவா் இடிந்தது:

மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் மழையினால், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொன்னாா் வாய்க்கால் சிறுபாலம் சேதம்: பெய்து வரும் மழையினால் திருமானூா் அருகே தூத்தூா் கிராமத்துக்கு செல்லும் பொன்னாா் வாய்க்கால் சிறு பாலம் சேதமடைந்தது. இதையறிந்த ஆட்சியா் த.ரத்னா, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் சேதப்பகுதிபைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் இந்தப் பாலத்தை உடனடியாக சீா் செய்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட வெள்ளாற்று தரைப்பாலம்: அரியலூா் - கடலூா் மாவட்ட மக்களை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே, கோட்டைக்காடு - செளந்திரசோழபுரம் இடையே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்ட மக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மக்காச்சோளம் பயிா்கள் சேதம்: தொடா் மழையின் காரணமாக செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானவாரி பயிா்களான மக்காச்சோள பயிா்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை வரை பதிவான மழையளவு:

அரியலூரில் 70 மி.மீ, ஜயங்கொண்டத்தில் 36 மி.மீ, செந்துறையில் 52 மி.மீ, திருமானூரில் 45 மி.மீ அளவும் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 50.75 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

சென்னிவனம் கிராமத்தில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள்:

சென்னிவனம் பகுதியில் மழையுடன் வீசிய சூறைக்காற்றில் அங்குள்ள காலனித் தெருவில் உள்ள புளியமரம், வாதநாராயண மரம், கருவேல மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் சில மரக்கிளைகள் மின் கம்பியில் விழுந்ததால் மின் கம்பங்களும் சோ்ந்து சாய்ந்தன. மேலும் வீடுகளின் மேற்கூரைகள், ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மின் ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலா் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு மீட்புப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com