மக்காச்சோளப் பயிரில்  படைப்புழு தாக்குதலை குறைக்க யோசனை

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் உண்டாகும் படைப்புழு தாக்குதலைக் குறைக்க நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் உண்டாகும் படைப்புழு தாக்குதலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும்  மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம் விதைப்பு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு படைப்புழுவின் தாக்குதலால் மக்காச்சோளத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டது.
தற்போது கோடை உழவுப் பணிகள் முடிவு பெற்றுள்ளதால் விதைப்பதற்கு முன் கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இதன்மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். விதை முளைத்துவரும் காலங்களில் படைப்புழு தாக்குதலை தவிர்த்திட அவசியம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
ஒரு கிலோ விதைக்கு பேவேரியா பேசியானா 10 கிராம் அல்லது தயோமீதாக்சம் 30 எப்.எஸ். 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு வரிசையில் விதையை நெருக்கமாக விதைத்தால் படைப்புழு எளிதில் பரவும். மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 40 செ.மீட்டரும், பயிருக்கு பயிர் 25 செ.மீட்டரும் இடைவெளி விட வேண்டும். 10 வரிசைக்கு ஒரு வரிசை விதைக்காமல் விட்டு இடைவெளி பராமரித்தால் பயிரை கண்காணிக்கவும், பூச்சிக்கொல்லி தெளிக்கவும் எளிதாக இருக்கும். ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறி வைத்தல் வேண்டும். இதன்மூலம் தாய்பூச்சி முட்டையிடுவதைக் கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகள் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து விதைத்த 25 நாட்கள் வரை பயிர்களில் உள்ள முட்டை குவியல்கள், புழுக்களைக் கையால் சேகரித்து அழிக்க வேண்டும். வரப்பு பயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு ஆகியவற்றை 4 வரிசை விதைக்க வேண்டும். ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றைப் பயிரிட வேண்டும்.
இதன்மூலம் படைப்புழுவின் தாய் பூச்சி முட்டையிடுதல் வெகுவாக குறையும். மேற்கண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 40-45 நாள்களில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தி விட்டால் 45-105 நாள் வரை இப்புழுவின் தாக்குதலை வெகுவாகக் குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து நாம் எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com