"நிலக்கடலை பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் இட்டால் அதிக மகசூல்'
By DIN | Published On : 13th September 2019 09:46 AM | Last Updated : 13th September 2019 09:46 AM | அ+அ அ- |

நிலக்கடலை பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் இட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று ஜயங்கொண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ)சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமீபத்திய மழைப்பொழிவை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டுள்ளனர். நிலக்கடலை பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட வேண்டும். மேலும் விதைத்து 45 நாள்களுக்குப் பிறகு அதாவது இரண்டாவது களை எடுக்கும்போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் கம்பி இறங்குவது எளிதாவதுடன் பொக்கில்லாத நல்ல திரட்சியான மணிகள் கிடைக்கும். மேலும் ஜிப்சத்திலுள்ள கந்தகச் சத்து மணிகளின் எண்ணெய் சதவீதத்தை அதிகரிக்கிறது. இதனால் 15-20 சதம் அதிக மகசூல், அதிக வருவாய் பெறலாம்.