மேலராமநல்லூர்-குடிகாடு பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமையுமா?

கிடப்பில் போடப்பட்டுள்ள மேலராமநல்லூர்-குடிகாடு இடையே கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில்  பொதுமக்கள் உள்ளனர்.
மேலராமநல்லூர்-குடிகாடு பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமையுமா?

கிடப்பில் போடப்பட்டுள்ள மேலராமநல்லூர்-குடிகாடு இடையே கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில்  பொதுமக்கள் உள்ளனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் -தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள பகுதிகளைக் கடந்து செல்கிறது கொள்ளிடம் ஆறு. திருமானூர் பகுதியில் அகன்ற கொள்ளிடம் ஆறாக செல்கிறது. இதில் திருமானூர் கொள்ளிட ஆற்றின் நடுவில் மேலாராமநல்லூர்,கீழராமநல்லூர் என இரு கிராமங்கள் உள்ளன. தீவு போலக் காணப்படும் இந்த கிராமங்களில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.
வீடுகள், விவசாய நிலங்கள் என 500 ஹெக்டேரில் ஆற்றுக்குள்ளேயே மேடான பகுதியில் பரந்து விரிந்திருக்கின்றன மேற்கண்ட கிராமங்கள். 
இக்கிராம மக்கள் பயன் பெறும் வகையில், அரியலூர் மாவட்டத்துக்கு எளிதில் சென்று வர கிராமத்தின் வடக்குப் பகுதியிலுள்ள அழகியமணவாளம் கிராமத்தை இணைத்து உயர்மட்ட பாலம் கடந்த 4 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. ஆனாலும் இக்கிராம மக்கள் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள அரியலூருக்குச் சென்று வர  விரும்பவில்லை.
ஆனால் அனைத்து தேவைகளுக்கும் அரை கிலோ மீட்டர் தூரமே உள்ள கொள்ளிடம் ஆற்றைக் கடந்து, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம், பாபாநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். தங்களது வயல்களில் விளையும் காய்கறிகள், கீரைகளை இந்தப் பகுதிகளுக்கு சென்று விற்பது இன்றளவும் தொடர்கிறது.  கபிஸ்தலம், பாபநாசம், கும்பகோணம் ஆகிய நகரங்கள் மிகவும் அருகில் இருப்பதால் பள்ளி, கல்லூரி மேற்படிப்பைத் தொடர மாணவ,மாணவிகளும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். அரை கி.மீ. தூரம் கொண்ட கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியில் தண்ணீர் இல்லாத நாள்களில் தாங்கள் அமைத்த தரைப்பாலத்தில் நடந்து செல்லும் இக்கிராம மக்கள், ஆற்றில் தண்ணீர் வந்தால்  படகு மூலம் செல்கின்றனர்.  தண்ணீர் வந்து விட்டால் இவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவது தொடர்கிறது.
பாலம் கட்டியிருந்தால் உயிர் பலிக்கு வாய்ப்பில்லை... பாலம் கட்டியிருந்தால் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்கின்றனர் இப்பகுதியினர்.  இதுகுறித்து மேலராமநல்லூர்,கீழராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியது: 
கொள்ளிடம் ஆற்றுக்குள்ளேயே மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த ஊரில்  5 தலைமுறைகளுக்கு மேலாக வசிக்கிறோம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். விவசாயம்தான் முக்கிய தொழில். இங்கு விளையும் கரும்பு, காய்கறிகள், நெல் உள்ளிட்டவற்றை  கும்பகோணம் பகுதிக்கு கொண்டு சென்று விற்கிறோம்.இதனால் எங்க ஊரை தஞ்சாவூருடன் இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாகப் போராடியும் பயனில்லை.  ஆற்றில் தண்ணீர் வந்தால் நாங்கள் படும் துயரத்திற்கு அளவிருக்காது. பாலம்  கட்டியிருந்தால் 3 பேர் இறந்திருக்க வாய்ப்பில்லை.  கடந்தாண்டு கொள்ளிடத்தில் தண்ணீர் கரை புரண்டோடியதால் எங்கள் வாழ்க்கையே முடங்கியது.  இதேபோல இந்தாண்டும் கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கஷ்டம்தான். பாலம் கட்டினால் அரியலூர் மாவட்டத்திலுள்ள 44 கிராமத்தினர் பயன்பெறுவர் என்றனர்.எனவே, பாலப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது இரு மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அடிக்கல் நாட்டியும் பணி தொடங்கவில்லை 
இதையடுத்து அப்பகுதி மக்கள், மேலராமநல்லூர்-குடிக்காடு இடையே கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க  பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.55 கோடியில் பாலம் கட்டும் பணிக்கு வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. கடந்தாண்டு கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டபோது மேற்கண்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இந்தக் கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து  மூவர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com