சுண்ணாம்புக் கல் சுரங்கம் இனி வேண்டாம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் இனி சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இனி சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வாலாஜா நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு, சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைக்க வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்துப் பேசினர்.
சமூக ஆர்வலர் தமிழ்களம் இளவரசன்: காலாவதியான சுரங்கங்கள் மூடப்படாமல் இருப்பதால் பல உயிரிழிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. 
மேலும் நிலம் அளித்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்க வில்லை. இங்குள்ள சிமென்ட் ஆலைகள், சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அனைத்தும் கனிம விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. எனவே காலவதியான சுரங்கங்களை மூடிவிட்டு, புதிய சுரங்கங்கள் அமைக்கலாமா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் சங்கர்: சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக சமூக பொறுப்பணர்வு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.16 கோடி நிதியை இதுவரை செலவிடவில்லை.  
சுண்ணாம்புக் கல் சுரங்கம் மற்றும் சிமென்ட் ஆலைகளால் 10 ஆண்டுகளில் மட்டும் 5,622 சாலை மற்றும் இதர விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கை, கால்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை கூட இந்த சிமென்ட் ஆலைகள் வழங்கவில்லை. எனவே அரியலூர் மாவட்டத்தில் இனி சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என்றார்.  
தொடர்ந்து கிராம மக்களின் கருத்துக்களையும் ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டறிந்தார். கருத்துக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் சுரங்கங்கள் இணை இயக்குநர் சரவணன், உதவி இயக்குநர் ஜோதி, சென்னை டான்மின் துணை மேலாளர்கள் கணேசன், விஜயகுமார், திருச்சி கோட்ட மேலாளர் மனோகரன், உதவிப்பொறியாளர்கள் இளமதி, ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கேட்புக் கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com