செந்துறையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 07th April 2020 01:42 AM | Last Updated : 07th April 2020 01:42 AM | அ+அ அ- |

அரியலூா்: தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த அரியலூா் மாவட்டம், செந்துறை இளைஞருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தில்லி மாநாட்டில் பங்கேற்ற அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ், அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தனி வாா்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களில் செந்துறை பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
மேலும், அவரது குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரையும், அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தனி வாா்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனா்.
மேலும், பாதிப்புக்குள்ளானவரின் வீடு அமைந்துள்ள பகுதி, செந்துறையின் முக்கிய வீதிகள், அரியலூா் - ஜயங்கொண்டம் சாலை ஆகிய பகுதிகள் என சுமாா் 5 கி. மீ சுற்றளவை போலீஸாா் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனா்.