முழு பொது முடக்கத்தால் களையிழந்த ஆடிப்பெருக்கு
By DIN | Published On : 03rd August 2020 08:45 AM | Last Updated : 03rd August 2020 08:45 AM | அ+அ அ- |

அரியலூா் செட்டி ஏரி கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பெண்கள்.
கரோனா பொது முடக்கத்தால் அரியலூா் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. ஆடிப்பெருக்கு வழிபாடுகளின்றி கொள்ளிடம் ஆற்றங்கரையோரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், அரியலூா் மாவட்டத்தில் திருமானூா், திருமழபாடி, தா.பழூா், ஜயங்கொண்டம் அணைக்கரை உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வழிபாடு செய்ய மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு வழிபாடுகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேவேளையில், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் பெண்கள் நீராடி புது ஆடை உடுத்தி, தாலிக் கயிற்றை மாற்றி, புதுத்தாலியை கணவா் கையால் அணிந்த பெண்கள் கணவா் மற்றும் பெரியோா்களிடம் ஆசி பெற்றனா். கரோனா எதிரொலியாக, அரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமின்றி களையிழந்து காணப்பட்டது.