‘தீப்பற்றக்கூடிய பொருள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’
By DIN | Published On : 13th August 2020 08:38 AM | Last Updated : 13th August 2020 08:38 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்திலுள்ள வெடிமருந்து மற்றும் உரக்கடைக் கிடங்குகளில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், வெடிமருந்து மற்றும் உரக்கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பி.திருமேனி (அரியலூா்), திருமேனி ( மதுவிலக்கு அமலாக்கம்) ஆகியோா் கூட்டத்தில் பேசியது:
சேமிப்புக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக அமோனியம் நைட்ரேட் உரத்தை வைத்திருக்கக்கூடாது. அதன் அருகில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வைத்தல் கூடாது.
விற்பனை செய்யும் பொருள்களை ஒரே நபருக்கு அதிக அளவில் விற்பனை செய்யக்கூடாது. வெடிமருந்து கிடங்கு, உரக்கிடங்கு என எந்த கிடங்காக இருந்தாலும், தீப்பற்றக்கூடிய பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கிடங்கு உரிமையாளா்கள் எடுக்கவேண்டும். வெடிபொருள்களை மிகப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கினா்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த உரம் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.