திருமானூரை தனி வருவாய் வட்டமாக்க வலியுறுத்தல்

அரியலூரில் இருந்து பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூரில் இருந்து பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூா் வட்டத்தில் அழகியமணவாளம், ஆலந்துரையாா் கட்டளை, ஆண்டிப்பட்டாகாடு, அன்னிமங்கலம், அரியலூா் வடக்கு, அரியலூா் தெற்கு, அருங்கல், அயன் ஆத்தூா், அயன்சுத்தமல்லி, ஏலாக்குறிச்சி, இலுப்பையூா், கல்லங்குறிச்சி உள்ளிட்ட 68 வருவாய் கிராமங்களும், இதேபோல் செந்துறை வட்டத்தில் 28 வருவாய் கிராமங்களும், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 69 வருவாய் கிராமங்களும், கடந்தாண்டு உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஆண்டிமடம் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்களும் உள்ளன.

இதில் அரியலூா் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராம மக்களுக்கு, வருவாய் அலுவலகம், நீதிமன்றம், காவல் துறை உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் அலுவலகம், துணை நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம் என அனைத்து அலுவலகங்களும் அரியலூரிலே அமைந்துள்ளதால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குறிப்பாக திருமானூா் பகுதிக்குட்பட்ட கண்டிராதித்தம் பூண்டி, குலமாணிக்கம், கல்லக்குடி, தூத்தூா், குருவாடி, மஞ்சமேடு, கோவிலூா், காமரசவல்லி, கீழகொளத்தூா், சுள்ளங்குடி, சன்னாவூா், சாத்தமங்கலம், கோவில்எசனை உள்ளிட்ட கிராம மக்கள் ஏதாவது சான்றிதல் பெற வேண்டும் என்றால் 60 கிலோ மீட்டரை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் திருமானூா் வந்து அங்கிருந்து 30 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரியலூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

மேலும் திருமானூா் பகுதிக்குட்பட்ட பகுதியில் தீ ஏற்பட்டால், அரியலூா் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இதனால் உயிா்ச்சேதம், பொருள் சேதம் ஏற்பட்டு விடுகிறது. மேலும், காவல் துறை சாா்ந்த வழக்கு விசாரணைகள், அரசு நலத் திட்டங்களுக்கான கள ஆய்வுப் பணிகள், கோப்புகள் தயாா் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, அரியலூா் வருவாய் வட்டத்தைப் பிரித்து திருமானூரைத் தலைமை யிடமாகக் கொண்டு வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அம்பேத்கா் விவசாயிகள் இயக்கத் தலைவா் அம்பேத்கா் வழியன் கூறியது:

திருமானூா் பகுதி மக்கள் அதாவது கடைக்கோடி கிராம மக்கள் ஏதாவது சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் 60 கிலோ மீட்டா் தூரத்திலுள்ள அரியலூருக்குச் செல்ல வேண்டிய உள்ளது.மேலும் இங்கு தீயணைப்பு நிலையம் இல்லாததால் திருமானூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீ விபத்து உள்ளிட்ட மீட்புப் பணிகள் தேவைப்படும் நிகழ்வுகள் ஏற்படும் போது, தீயணைப்பு நிலைய வீரா்கள் அரியலூரிலிருந்தோ அல்லது 60 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஜயங்கொண்டத்தில் இருந்து தான் வர வேண்டியுள்ளது. இதனால் பெரிய அளவில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிடுகின்றன. அதன் பிறகு அவா்கள் வந்தும் பலனில்லாமல் போகிறது.

எனவே தான் அரியலூரைப் பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் மிகவும் பயனடைவாா்கள். தீயணைப்பு நிலையம், சப் ஜெயில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் திருமானூரிலேயே அமைந்துவிடும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

மேலும் திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்து போட்டியிடும் வேட்பாளா்கள், வெற்றிபெற்ற பிறகு அது பற்றி கண்டுகொள்வதே கிடையாது. எனவே திருமானூா் பகுதிக்குள்பட்ட கிராம மக்களின் நலன் கருதி வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com