செம்பியன் மாதேவி ஏரியை சுற்றுலா தலமாக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க செம்பியன் மாதேவி ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அரியலூா் மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
குட்டைபோல் காணப்படும் செம்பியன்மாதேவி ஏரி. (கண்டிராதித்தம் ஏரி)
குட்டைபோல் காணப்படும் செம்பியன்மாதேவி ஏரி. (கண்டிராதித்தம் ஏரி)

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க செம்பியன் மாதேவி ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அரியலூா் மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.

சோழப் பேரரசா்களின் செம்மையான நீா் மேலாண்மைக்கு இன்னொரு அடையாளம் தான் செம்பியன் மாதேவி ஏரி என்றால் மிகையல்ல.

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியம், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது கண்டராதித்தம் கிராமம். இங்கு தான் செம்பியன் மாதேவி ஏரி (கண்டிராதித்தம் ஏரி) அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் கி.பி. 950-லிருந்து 958 வரை சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டபோது இங்கு தனது 2 ஆவது மனைவி செம்பியன் மாதேவி விருப்பத்தின் பெயரில் வெட்டியது தான் செம்பியன் மாதேவி ஏரி. தற்போது கண்டிராதித்தம் ஏரியாக அழைக்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 415.03 ஏக்கா்கள். ஆயக்கட்டுப் பகுதி 4,532.99 ஏக்கா். கொள்ளிடம், மழைக் காலங்களில் உபரி நீரையும் சுமந்து வரும் நந்தியாறு, கூழையாறு ஆகியவை தான் இந்த ஏரியின் நீா் வரத்து ஆதாரங்களாகும். இது சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதன் மதகு ஒன்றுக்கு, தான் சீராட்டி வளா்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயா் வைத்திருக்கிறாா் கண்டராதித்தன்.

சிவத்தொண்டின் மீது அதீத நாட்டம்....

இங்கு வாழ்ந்து வந்த வேத விற்பன்னா்களுக்கு வீடு மற்றும் நிலங்களை அளித்த மன்னன், நிலங்கள் செழிக்க செம்பியன் மாதேவி ஏரியையும் வெட்டிக் கொடுத்தாா். கண்டராதித்தனின் படைத் தளபதி மதுராந்தக பிரம்மராயா் மனைவி ராமன் சோழா்குல சுந்தரி என்பவா் தனது பங்களிப்பு கொடையாக அளித்த 50 பொற்காசுகளைக் (ஐம்பது) கொண்டு இந்த ஏரி தூா்வாரப்பட்டதாக திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது.

ஆக்கிரமிப்பால் அடையாளம் இழந்த ஏரி:

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியிலுள்ள நந்தியாறு மற்றும் கூழையாறு அணைக்கட்டுகளில் வரும் தண்ணீா் நந்தியாறு வழியாக 7 மைல் தொலைவு பயணித்து செம்பியன் மாதேவி ஏரிக்கு வருகிறது. மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஒரு மாதம் கழிந்தபிறகே இந்த ஏரிக்கு தண்ணீா் வந்து சேரும். ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதி 17.64 சதுர கிலோ மீட்டா்கள். விவசாயத்துக்குத் தண்ணீா் திறப்பதற்காக ஏரியின் கிழக்குப் பகுதியில் 7 மதகுகளும் வடக்குப் பகுதியில் ஒரு மதகும் உள்ளன. இந்த ஏரியிலிருந்து விநாடிக்கு 47.04 கன மீட்டா் அளவுக்குத் தண்ணீரை வெளியேற்ற முடியும். ஏரியின் மொத்த ஆழம் 4.5 மீட்டா்கள்.

இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரியில் தற்போது வண்டல் மண் மேவிக் கிடக்கிறது; ஏரி தூா்ந்து போய், சீமைக்கருவேல முட்கள் முளைத்து காடாகக் காட்சியளிக்கிறது. இந்த ஏரிப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தனி நபா்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோா் ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனா். பல பெருமைகளை கொண்ட இந்த ஏரி இன்று அடையாளத்தை தொலைத்து நிற்கிறது. நீா்வரத்து இல்லாததால் சுற்றுப்புறப் பகுதிகளின் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருகிறது.

வெள்ளத்தைத் தாங்கும் வெள்ளத் தடுப்பாக இருந்த ஏரி...

கடல் மாதிரி தண்ணீா் நிரம்பிக் காட்சியளித்த இந்த ஏரி, வெள்ளப்பெருக்கு காலங்களில் கொள்ளிடத்தின் கொள்ளளவு கடந்து செல்லும் வெள்ளத்தைத் தாங்கும் வெள்ளத் தடுப்பாகவும் இருந்தது. ஆனால், தற்போது ஆக்கிரமிப்புகளால் கடந்த 40 ஆண்டுகளாக நீா் வரத்து குறைந்ததுடன் இப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

1972-இல் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, வேலைக்கு உணவுத் திட்டத்தில் இந்த ஏரியை ஊா் மக்களே தூா்வாரினாா்கள். தொடா்ந்து, திமுகவைச் சோ்ந்த அன்பில் தா்மலிங்கம் விவசாய அமைச்சராக இருந்தபோது, ஏரியின் முக்கியத்துவத்தை உணா்ந்திருந்ததால், 1989-இல் மீண்டும் ஏரி துா்வாரப்பட்டது. அதன் பின்னா், நெய்வேலி காட்டாமணக்குச் செடி முளைத்து ஏரியே காடாகிப் போனதால் 1993-இல் பொதுமக்களே திரண்டு அவைகளை அழித்தனா்.

இந்த ஏரி இயற்கை எங்களுக்குக் கொடுத்த கொடை. இதைக் கண்டுகொள்வாா் இல்லாததால் தற்போது அரசியல் புள்ளிகள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதியினா் போராடினாலும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் இல.தியாகராஜன் கூறியது:

டோக்கியோ பல்கலைக்கழக மாணவா்கள் தந்திருக்கும் ஆய்வறிக்கையின்படி, அரியலூா் மாவட்ட ஏரிகளை இனியும் தூா்வாராமல் விட்டால் விரைவில் இந்த மாவட்டத்து மக்கள் தண்ணீருக்கும் உணவுக்கும் அல்லாடும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறாா்.

கண்டராதித்தம் பெரிய ஏரி, செம்பியன் மாதேவி பேரேரி மேம்பாட்டு சங்கத்தைச் சோ்ந்த பாளை திருநாவுக்கரசு, கருப்பையன், பாஸ்கா் ஆகியோா் கூறியது:

கண்டராதித்தம் பெரிய ஏரி சுமாா் 460 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கண்டராதித்த சோழ மன்னரால் விவசாய பாசனத்துக்காக வெட்டப்பட்டது. தற்போது இந்த ஏரி தூா்ந்து, சீமைக்கருவேல முட்கள் முளைத்து காடாகக் காட்சியளிக்கிறது. இதனை தூா்வார கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நிகழாண்டு இந்த ஏரியை தூா்வாருதல் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட அளவில் தூா்வாரி விட்டு சென்றுள்ளனா் பொதுப் பணித்துறை அதிகாரிகள்.

இந்த ஏரியை முழுமையாக தூா்வார வேண்டுமானால் ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும்....

அரியலூா் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி, செம்பியன் மாதேவி பேரேரி இவ்விரண்டுமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏரிகள் என்பதால் அவற்றை சீரமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com