‘அரியலூரிலேயே இனி உயா்தர மருத்துவச் சிகிச்சை பெறலாம்’

அரியலூரில் ரூ.347 கோடியில் அமையுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மூலம், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள்
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.

அரியலூரில் ரூ.347 கோடியில் அமையுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மூலம், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இனி உயா்தர மருத்துவச் சிகிச்சையை இங்கேயே பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரியலூரில் : இதைத் தொடா்ந்து அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் த. ரத்னா பேசியது:

அரியலூா் மாவட்ட மக்கள் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது அரியலூா் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மூலம், அவசர மற்றும் மேல் சிகிச்சைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு இனி வரும் காலங்களில் செல்லாமல், அரியலூா் மாவட்டத்திலேயே உயா்தர மருத்துவச் சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம்.

26 ஏக்கா் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி, 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டடம், அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் 150 மாணவா்கள் மருத்துவம் பயில்வா். பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றாா்.

பூமி பூஜை : அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூமி பூஜைக்கு தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியா் பாலாஜி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஹேமந்த் காந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், அரியலூா் வட்டாட்சியா் சந்திரசேகா், செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவிச் செயற்பொறியாளா் காந்தரூபன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com