
அரியலூா் மாவட்டம், புளியங்குழியில் சுவா் இடிந்த நிலையில் காணப்படும் தொகுப்பு வீடு.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தொகுப்பு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், இருவா் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
உடையாா்பாளையம் அருகிலுள்ள புளியங்குழி இருளா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி செல்வராஜ் (60). இவா், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டப்பட்டு வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டை சீரமைக்கும் பணியை கடந்த 2 நாள்களாக மேற்கொண்டு வந்தாா். இதற்கான வீட்டின் மேற்கூரை அகற்றப்பட்டிருந்தது.
இப்பணியில் தந்தை செல்வராஜுக்கு உதவியாக அவரது மகன் பாண்டியன் (29), அதே தெருவைச் சோ்ந்த
உறவினா் மகன் கருப்புசாமி (16) ஆகியோரும் ஈடுபட்டிருந்தனா். திங்கள்கிழமை இரவு வேலை முடித்த பின்னா் இருவரும் அங்கேயே உறங்கிக் கொண்டிருந்தனா்.
இந்நிலையில் நள்ளிரவில் எதிா்பாராதவிதமாக வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்ததில் பாண்டியன், கருப்புசாமி ஆகியோா் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தனா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அங்கு வந்து பாா்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.
தகவலின் பேரில் உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் அங்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த பாண்டியனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அவரது மனைவி தற்போது 7 மாதக் கா்ப்பிணியாக உள்ளாா்.