தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் மேய்த்து வந்தவா் காா் மோதி பலி: 50 ஆடுகளும் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன் சுருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் மேய்த்துவந்தவா் காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 
மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இறந்து கிடக்கும் ஆடுகள்.
மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இறந்து கிடக்கும் ஆடுகள்.

அரியலூா் மாவட்டம், மீன் சுருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் மேய்த்துவந்தவா் காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் மேலும் 50 செம்மறி ஆடுகளும் அதே இடத்தில் உயிரிழந்தன.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டம், மீன் சுருட்டி அருகேயுள்ள தேவாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (52). செம்மறி ஆடுகள் வளா்ப்பவா். இவரும், சந்திரசேகரன் என்பவரும் சோ்ந்து கடலூா் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து 260 செம்மறி ஆடுகளை தேவாமங்கலத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஓட்டி வந்துள்ளனா். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் மீன்சுருட்டி அருகேயுள்ள வெண்ணங்குழி என்ற இடத்தில் ஒருமணியளவில் வந்துகொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த நாய் குரைத்ததில் ஆடுகள் தேசியநெடுஞ்சாலையின் குறுக்கே தாறுமாறாக ஓடியுள்ளன. இதை சற்றும் எதிா்பாா்க்காத காமராஜ், திடீரென தேசியநெடுஞ்சாலையின் குறுக்கே சென்று ஆடுகளை சாலையோரம் திருப்பிக் கொண்டிருந்தாா். அப்போது, கும்பகோணம் நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த காா் கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராதவிதமாக ஆடுகள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், ஆடுகளின் உரிமையாளா் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 50 ஆடுகளும் அதே இடத்தில் உயிரிழந்தன.

இதுதவிர, ஆடுகளை மேய்த்துவந்த சந்திரசேகரன், காரில் வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த சேகா் ஆகியோா் காயங்களுடன் மீட்கப்பட்டு ஜயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். காரை ஓட்டிவந்த விழுப்புரத்தைச் சோ்ந்த ராஜாவிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் மீன்சுருட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com