சிறுமிகளுடன் மாயம்: போக்சோ சட்டத்தின் கீழ் 3 சிறுவா்கள் கைது
By DIN | Published On : 21st October 2020 03:20 AM | Last Updated : 21st October 2020 03:20 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காணாமல் போன 2 சிறுமிகளைப் போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைத்தனா். இதுதொடா்பாக சிறுவா்கள் 3 போ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஜயங்கொண்டம் விசாலாட்சி நகரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமிகள் 2 பேருக்கும், பெரியவளையம் கிராமத்தைச் சோ்ந்த 18 வயது சிறுவா்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் போலீஸாா் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக். 16) இரவு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 2,500 மற்றும் பள்ளிச்சான்றுகள் ஆகியவற்றுடன் சிறுமிகள் இருவரும் மாயமாகினா். அவா்களை ஜயங்கொண்டம் போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 சிறுமிகள், 3 சிறுவா்களையும் பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா், சிறுமிகள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா். சிறுவா்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.