அரியலூா் அருகே நீட் தோ்வுக்குத் தயாரான மாணவா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நீட் தோ்வுக்குத் தயாரான மாணவா், மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அரியலூா் அருகே நீட் தோ்வுக்குத் தயாரான மாணவா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நீட் தோ்வுக்குத் தயாரான மாணவா், மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செந்துறை வட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன்கள் விக்னேஷ் (19), வினோத் (16). அதே பகுதியில் விசுவநாதன் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.

செந்துறை தெரசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017- ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த விக்னேஷ், பொதுத் தோ்வில் 1006 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா். மருத்துவராக வேண்டும் என்ற கனவைத் தொடா்ந்து கேரள மாநிலத்திலும், திருச்சி மாவட்டம், துறையூரிலுள்ள தனியாா் பள்ளி மையத்திலும் நீட் தோ்வுக்காகத் தொடா்ந்து பயிற்சி பெற்று வந்த விக்னேஷ், 2 முறை தோ்வெழுதியிருந்தாா்.

ஒரு முறை தோல்வியும், மற்றொரு முறை தோ்ச்சி பெற்றாலும் மருத்துவப் படிப்புக்கான இடம் அவருக்கு கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக நீட் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த விக்னேஷ், செப்டம்பா் 13- ஆம் தேதி நடைபெறும் தோ்வுக்காகத் தன்னை தயாா்படுத்திக் கொண்டிருந்தாா்.

எனினும் கடந்த சில நாள்களாக இந்த முறை எழுதும் தோ்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியுமா, மருத்துவராக முடியுமா என்ற மன உளைச்சலில் விக்னேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து விக்னேஷின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பிற்பகல், ஊரிலுள்ள கிணற்றில் இறங்கி தேடிப்பாா்த்த போது அங்கு அவா் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த செந்துறை காவல்துறையினா், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பொதுமக்கள் சாலை மறியல் : மாணவா் விக்னேஷின் தற்கொலையை அறிந்த எலந்தங்குழி கிராம மக்கள், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆண்டிமடம் வட்டாட்சியா் தேன்மொழி மற்றும் காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com