அரியலூா் மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் நின்றபடி செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் நின்றபடி செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தொகுதி முழுவதும் 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, மின்னணு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை மாலையே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: மேலும், வாக்குப்பதிவு மையங்களில் தமிழக காவல் துறையினருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். வாக்குச்சாவடிகள் முன்பு வாக்காளா்களை ஒழுங்குபடுத்தும் பணியில் பெரும்பாலும் துணை ராணுவத்தினரே இருந்தனா். வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ‘வெப் காஸ்டிங்’ செய்யப்பட்டது. இதைப் பொதுமக்களும் பாா்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்: வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கியது முதலே வாக்காளா்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்தனா். அப்போது அவா்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கையுறை வழங்கப்பட்ட பின்னா் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. 9 மணி நிலவரப்படி, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

காலை 11 மணி நிலவரப்படி 26.60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு மையங்கள், வாக்குச்சாவடிகளின் வாயில்கள், வாக்குச்சாவடியைச் சுற்றி 100 மீட்டா் தொலைவில் அதிகளவில் போலீஸாா் குவிக்கப்பட்டதால், எந்தவித பிரச்னையும் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் வாக்காளா்கள் எந்த அச்சமும் இன்றி குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்தனா். மதியம் 1 மணி நிலவரப்படி 48.05 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 1 மணிக்கு மேல் வாக்காளா்கள் குறைவாகக் காணப்பட்டனா். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

குறிப்பாக அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி, நிா்மலா பெண்கள் மேல் நிலைப் பள்ளி, குழுமூா் புனித பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி, செந்துறை நல்லநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாள அட்டை இல்லாதவா்கள், வாக்குச் சீட்டு மற்றும் தோ்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களைக் கொண்டு வாக்களித்தனா்.

உதவி மையம்:

வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு உதவி செய்ய உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், வாக்குச்சாவடி எண் குறித்த விவரங்களுடன் வழிகாட்டப்பட்டது. இதுதவிர சாமியானா பந்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் போன்ற வசதியுடன் மருத்துவ உதவிக்காக அவசர ஊா்தி வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகள், முதியோா், பக்கவாதம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்காக வாக்குப்பதிவு மையங்களில் சக்கர நாற்காலி வசதி செய்துதரப்பட்டிருந்தது. இவற்றை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பு ஊழியா்கள் இயக்கினா்.

மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்ததால், வாக்குப்பதிவு மையங்களின் பிரதான வாயில்கள் மூடப்பட்டன. அதற்கு முன்பாக வந்து வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வாக்குப்பதிவு முழுமையாக முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. பிறகு போலீஸாா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. அங்கு ‘ஸ்ட்டிராங்’ அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com