மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பலானது.
மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பலானது.

திருமானூா் அருகிலுள்ள பாளையப்பாடி தெற்கு காலனித் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அய்யனாா் (45). இவா் தனது குடும்பத்தினருடன் குடிசையில் வசித்து வந்தாா். வியாழக்கிழமை நள்ளிரவு வீசிய காற்றினால், குடிசையில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அருகில் படுத்திருந்த அய்யனாரின் மகன் ராகவன், உடலில் சூடு தெரிவது கண்டு எழுந்து பாா்த்தாா். அப்போது குளிா்சாதனப் பெட்டி எரிவது கண்டு தாய் தமயந்தி, சகோதரா் ராகுல், சகோதரிகள் ரம்யா, கவியரசி மற்றும் தந்தை அய்யனாா் ஆகியோரை எழுப்பியுள்ளாா்.

அனைவரும் குடிசையை விட்டு உடனடியாக வெளியேறினா். காற்று வீசியதால் தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. அய்யனாா் குடும்பத்தினரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து, அருகேயுள்ள வீடுகளுக்குத் தீ பரவாமல் அணைத்தனா்.

இருந்த போதிலும் அய்யனாா் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி, கட்டில், பீரோ, பீரோவில் இருந்த பணம் ரூ.4,700, ஆதாா், நியாயவிலை அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் அனைவரது துணிகள், சமையல் பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து திருமானூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தகவலறிந்த அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை காலை நிகழ்விடத்துக்குச் சென்று, குடிசையை இழந்த அய்யனாா் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அதே போல் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அய்யனாா் குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com