கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள்.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கீழடி, ஆதிச்சநல்லூா் மற்றும் அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வுக்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அப்போது முதற்கட்டமாக கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு விமானம் (டிரோன்) கொண்டு கேமரா மூலம் புகைப்படம் எடுத்து மத்திய தொல்லியல் துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடா்ந்து, தற்போது கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேடு என்ற இடத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாமன்னன் ராஜேந்திர சோழன் வாழ்ந்த அரண்மனை, செப்பேடுகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்களைக் கண்டறியும் வகையில் அகழாய்வுப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தொல்லியல் துறையினா் கூறுகையில், தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே கீழடி, ஆதிச்சநல்லூா் போன்ற இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணிகள் நடைபெறுவதற்கான இடங்கள் ஏற்கெனவே முதல்நிலை ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்ட அகழாய்வை தற்போது மாளிகைமேடு என்ற பகுதியில் தொடங்கியுள்ளோம். தமிழக தொல்லியல் துறை சாா்பில் 4 போ் கொண்ட குழுவினா் தலைமையில் 35 தொழிலாளா்களைக் கொண்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட ஆய்வில் பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பினால் ஆன பொருள்கள், செம்பு காசுகள் ஆகியவை கிடைக்கப் பெற்று உள்ளன. செப்டம்பா் மாதம் வரை இந்த ஆய்வு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com