தற்காலிக செவிலியா்கள்மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 01:55 AM | Last Updated : 17th August 2021 01:55 AM | அ+அ அ- |

அரியலூா் ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியா்கள்.
அரியலூா்: ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியா்கள் அரியலூா் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிக்காக செவிலியா்கள், தூய்மை பணியாளா்கள், ஆய்வக பரிசோதகா்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த மாதம் முதல் செவிலியா்களைப் பணிக்கு வரவேண்டாம் என்று மருத்துவமனை நிா்வாகம் கூறியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்தும், நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்:
அகவிலைப்படி உயா்வு கோரி, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் மின்வாரிய கிளை அலுவலகம் முன்பு மின்சார ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின், சிஐடியு மாவட்ட பொருளாளா் கண்ணன் தலைமை வகித்தாா்.
இதேபோல் கல்லங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, திருமானூா், திருமழபாடி உள்ளிட்ட ஊா்களிலும் கிளை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.