முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
126 பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்க நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா்
By DIN | Published On : 19th December 2021 01:08 AM | Last Updated : 19th December 2021 01:08 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்துள்ள 126 கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலுாா் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை இடிக்க கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த 196 கட்டடங்களும், அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 24 கட்டடங்கள், கழிவறைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தலைமையில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற காணொலிக் கூட்டத்தின் தொடா்ச்சியாக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 98 கட்டடங்களும், அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 28 கட்டடங்கள் மற்றும் கழிவறைகளும் இடிக்க, துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மற்றும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.