முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு செய்ய வழிவகை
By DIN | Published On : 19th December 2021 11:36 PM | Last Updated : 19th December 2021 11:36 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட விவசாயிகள் இணையவழியில் தங்கள் நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-இல் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.