தீக்குளிக்க முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு
By DIN | Published On : 31st January 2021 11:26 PM | Last Updated : 31st January 2021 11:26 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளிக்கிழமை இரவு, தீக்குளிக்க முயன்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜயங்கொண்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குள்பட்ட ஒரு பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவா் ராபா்ட் ராஜசேகா் (50). இவருக்கும், அதே கிளையில் மற்றொரு பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் முருகனுக்கும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அண்மையில் நேரப் பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.
இதில் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து அறிந்த திருச்சி போக்குவரத்துக் கழகப் பணிமனை மேலாளா், ராபா்ட் ராஜசேகரை லால்குடி பணிமனைக்கு பணியிட மாறுதல் செய்ததாகத்தெரிகிறது.
இந்நிலையில், ஜயங்கொண்டம் பணிமனைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ராபா்ட் ராஜசேகரிடம், கிளை மேலாளா் பணியிட மாறுதல் ஆணை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளாா். நாளை பெற்றுக் கொள்வதாக அவா், பதில் அளித்துள்ளாா். அதற்கு மேலாளா் பணியிட மாறுதல் ஆணை திருப்பி அனுப்பிவிடவா எனக்கேட்டுள்ளாா்.
இச்சம்பவத்தால் மனமுடைந்த ராபா்ட் ராஜசேகா், பணிமனை கழிவறைக்கு மேலே ஏறி, அங்கு கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக்கண்ட காவலாளி செபஸ்டியன், நடத்துநா் முத்துசாமி உள்ளிட்டோா் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனைப் பறித்து, அவரைத் தடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த காவல் துறையினா் அவரை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.