25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 01st July 2021 06:18 AM | Last Updated : 01st July 2021 06:18 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 1,386 இடங்களில் நலிவுற்ற ஏழை மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். இந்த மாணவா் சோ்க்கைக்கு 5. 7. 2021 முதல் 3. 8. 2021 வரை இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் குலுக்கல் அடிப்படையில் 10.08.2021 அன்று தோ்வு செய்யப்படும். 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவா்களின் சோ்க்கை விவரத்தை சிறுபான்மையற்ற பள்ளிகள் மாவட்ட மையத்தில் 14. 8. 2021 அன்று ஒப்படைக்க வேண்டும். எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் குழந்தைகளின் பெற்றோா் இணையதளம் மூலமாக 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.