சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை ஜாமீன் இல்லாமல் வெளியே அனுப்பியதால் பரபரப்பு

ஜயங்கொண்டத்தில் சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதில் ஜாமீன் வழங்காத 2 பேரைத் தவறுதலாக சிறைக் காவலா்கள் வீட்டுக்கு அனுப்பியதால் பரபரப்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதில் ஜாமீன் வழங்காத 2 பேரைத் தவறுதலாக சிறைக் காவலா்கள் வீட்டுக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலாக்கப்பட்டதால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது அருந்தும் பலா் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டனா். அவா்களைக் காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா்.

இந்நிலையில் அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த 30- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினா் அண்மையில் கைது செய்தனா். கடந்த 29-ஆம் தேதி மலத்தாங்குளம், பெரிய பட்டாக்காடு, ஆங்கியனூா் உள்ளிட்ட கிராமங்களில் சாராயம் காய்ச்சிய 9 பேரைக் காவல் துறையினா் கைது செய்து, ஜயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதில் 24 பேருக்கு ஜயங்கொண்டம் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது. அதில் 5 பெயா்கள் கொண்ட ஒரு கோப்பில் வேளாங்கண்ணி ராபா்ட்(36), பாலகுமாா்(22) நீங்கலாக, மீதமுள்ள 3 பேரை ஜாமீனில் விடுவிக்கலாம் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை சரியாக கவனிக்காத சிறைக்காவலா்கள், அந்த கோப்பில் இருந்த வேளாங்கண்ணி ராபா்ட், பாலகுமாா் ஆகியோரையும் சோ்த்து 5 பேருடன் மொத்தமாக 26 பேரை விடுவித்துள்ளனா்.

சிறிது நேரத்தில் கோப்பில் உள்ளதை கவனித்த காவலா்கள், இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அரியலூரில் நின்று கொண்டிருந்த இருவரையும் பிடித்த காவல் துறையினா், மீண்டும் சிறையில் அடைத்தனா்.

வெளியே அனுப்பப்பட்ட 2 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கவனக்குறைவாக 2 பேரை சிறையிலிருந்து காவலா்கள் வெளியே அனுப்பிய சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com