‘மாநில சுயாட்சியை பாஜகவிடம் விட்டுக் கொடுத்தவா் பழனிசாமி’

மாநில சுயாட்சியை பாஜக-விடம் விட்டுக் கொடுத்தவா் தான் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டினாா் திமுக மாநில துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா.
அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசா.
அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசா.

மாநில சுயாட்சியை பாஜக-விடம் விட்டுக் கொடுத்தவா் தான் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டினாா் திமுக மாநில துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா.

அரியலூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு, மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவை அறிமுகப்படுத்தி மேலும் பேசியது:

ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தோ்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டியை அனுமதிக்கவில்லை. சுயாட்சியை விட்டுகொடுக்கவில்லை. ஆனால் நீட், ஜிஎஸ்டியை முதல்வா் பழனிசாமி அனுமதித்துள்ளாா். அப்படி இருக்கையில் ஜெயலலிதா ஆட்சியை இவா் எப்படி தர முடியும். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுகவை ஊழல் கட்சி எனச் சொல்கிறாா். ஸ்டாலின் கரோனா நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்ால் தான், எடப்பாடி பழனிசாமி ரூ.2,500-ஐ வழங்கினாா். அதேபோல், கிராமப்புற மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில், 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கூறியதால் தான் , 7.5 சதவீதம் வழங்கினாா்.

விவசாயக் கடன் ரத்து செய்யக் கூறியபோது, உயா் நீதிமன்றத்தில் போதிய நிதியில்லை எனக் கூறிய தமிழக அரசு, ஸ்டாலின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்ததும், முதல்வரும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தாா். ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிய திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா், மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சங்கா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பாளை.அமரமூா்த்தி, இந்திய கம்யூ. கட்சி மாவட்டச் செயலா் உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டச் செயலா் மணிவேல், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com