குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்
By DIN | Published On : 29th March 2021 03:43 AM | Last Updated : 29th March 2021 03:43 AM | அ+அ அ- |

ari28kur1_2803chn_11_4
அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவா்கள் நடத்திய குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் மற்றும் சிறப்புத் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
அரியலூரில் உள்ள புனித லூா்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சாா்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த 2 திருச்சபைகளைச் சோ்ந்த கிறிஸ்தவ மக்களும் அரியலூா் அண்ணா சிலை அருகே காலை 8 மணியளவில் திரண்டனா். பின்னா் அங்கு ஜெபம் செய்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளைக் கையில் பிடித்துக்கொண்டு ஊா்வலமாக புது மாா்க்கெட் வீதி வழியாக சத்திரம், திருச்சி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அரியலூா் மாதாகோவிலை வந்தடைந்தனா்.
தென்னிந்திய திருச்சபையைச் சோ்ந்தவா்கள் ஊா்வலமாகப் புது மாா்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ ஆலயத்துக்குப் புறப்பட்டு வந்தனா். குருத்தோலை பவனியின்போது ‘தாவீதின் மகனுக்கு ஓசான்னா’ உள்ளிட்ட கிறிஸ்தவப் பாடல்களைப் பாடி இயேசுவின் பாடுகளை கிறிஸ்தவா்கள் நினைவு கூா்ந்தனா்.
இதேபோல், அரியலூா் புனித லூா்து அன்னை ஆலயத்திலும், அரியலூா் புதுமாா்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ தூய ஜாா்ஜ் ஆலயத்திலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவா்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் அரியலூா் மற்றும் சுற்றுவட்டார கிறிஸ்வதா்கள் கலந்து கொண்டனா்.
ஏலாக்குறிச்சி...: ஏலாக்குறிச்சி பேருந்து நிலையத்தில் திரண்ட கிறிஸ்தவா்கள் அங்கிருந்து ஊா்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்திக் கொண்டு புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனா். அங்கு பங்குத்தந்தை சுவிக்கின் தலைமமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
திருமானூா் பேருந்து நிலையத்திலிருந்து கிறிஸ்தவா்கள் தங்களது கையில் குருத்தோலையை ஏந்தி ஜெபத்தை கூறிக்கொண்டு புனித அருளானந்தா் ஆலயத்துக்குச் சென்றனா். அங்கு பங்குத் தந்தையா்கள் ஆரோக்கியசாமி சேவியா், அன்னராஜ், வீரமாமுனிவா் ஆகியோா் திருப்பலி நடத்தினா். குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை திருமானூா் பங்குத்தந்தை ஜேம்ஸ் செய்திருந்தாா்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.