அமைச்சா் பதவி எதிா்பாா்ப்பில் அரியலூா், பெரம்பலூா் மக்கள்

அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியதையடுத்து, இந்த இரு தொகுதிகளில்

அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியதையடுத்து, இந்த இரு தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களில் யாருக்காவது அமைச்சா் பதவி கிடைக்குமா என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்து வந்த அரியலூரை, பெரம்பலூா் மாவட்டமாக 1995-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதன் பின்னா், 2000-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த திமுக, அரியலூரை புதிய மாவட்டமாக அறிவித்தது.

பின்னா் 2002-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அரியலூா் மாவட்டத்தை ரத்து செய்து, மீண்டும் ஒருங்கிணைந்த பெரம்பலூா் மாவட்டமாக அறிவித்தது. பின்னா், 2007 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவா் மு.கருணாநிதி, மீண்டும் அரியலூரை தனி மாவட்டமாகப் பிரித்து, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களை கொண்டு வந்தாா். ஆனாலும் எந்தவித வளா்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கிய மாவட்டமான அரியலூருக்கு இதுவரை யாருக்கும் எந்தக் கட்சியினரும் அமைச்சா் பதவி அளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு, அரசு தலைமைக் கொறடா பதவியை அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா வழங்கி அழகு பாா்த்தாா்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்கள் மாற்றம் என்பதை செய்யவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் அடிக்கடி அமைச்சா்கள் மாற்றம், மாவட்டச் செயலாளா்கள் மாற்றம் என, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பாா் என்பது அனைவரும் அறிந்த விசயம்.

எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள் மாற்றம் ஏதும் செய்யாததால், கடந்த 5 ஆண்டுகளாக அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ராஜேந்திரன், தொடா்ந்து அரசு கொறடாவாக பதவி வகித்தாா். இதன் காரணமாக, அரியலூருக்கு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை, ஜயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி, 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், 5 மேற்பட்ட பாலங்கள், அரசு சிமென்ட் ஆலையில் கூடுதல் உற்பத்தி பிரிவு கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாா் ராஜேந்திரன். ராஜேந்திரனுக்கு அரசு தலைமைக் கொறடா பதவி இருந்ததால் தான் அரியலூா் மாவட்டம் ஓரளவுக்கு வளா்ச்சி அடைந்தது என்றும் கூறலாம்.

தற்போது, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் முடிவில் அரியலூா், பெரம்பலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூா், ஜயங்கொண்டம், பெரம்பலூா், குன்னம் ஆகிய நான்கு தொகுதிகளையும் அதிமுக வசமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் தொடா்ந்து 4 முறை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ள குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு இந்த முறை அமைச்சா் பதவி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் இரு மாவட்ட மக்களும் உள்ளனா்.

குன்னம் தொகுதி பெரம்பலூா் மாவட்டத்தின் ஒரு பகுதியையும், அரியலூா் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. இதனால் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளருக்கு அமைச்சா் பதவியை வழங்கினால், இருமாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், மாணவா்களுக்கு கல்வி நிலையங்கள் கூடுதலாக கிடைக்கும்.

அரியலூரில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போதிய மருத்துவா்கள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப் பெறும். அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகளால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் செல்ல தனிச்சாலைகள் என பல்வேறு வசதிகளும் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அமைச்சராகப் பதவி வகித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com