முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
வாளரக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
By DIN | Published On : 05th October 2021 01:36 PM | Last Updated : 05th October 2021 01:36 PM | அ+அ அ- |

அடிப்படை வசதிகள் கேட்டு சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடவு போராட்டத்தில் ஈடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட வாளரக்குறிச்சி கிராம பொது மக்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் குடிநீர், மயான கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.
அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை ஊராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால்,
அக்கட்சியின் சார்பில் வாளரக்குறிச்சி கிராமத்திலுள்ள சேறும் சகதியுமான சாலையில் கொட்டும் மழையிலும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, அக்கட்சியின் கிளைச் செயலாளர்கள் ஆ.அப்பாதுரை, கோ.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உஉறுப்பினர் எம்.இளங்கோவன், வட்டச் செயலர் ஏ.கந்தசாமி,மாவட்டக் குழு உறுப்பினர் பி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.