ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன்: ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் உள்ள வேலிக்கருவை முள் செடிகளை அகற்ற வேண்டும். மழைக்கு முன்பு ஏரி, குளங்களை தூா்வார வேண்டும். சுத்தமல்லியில் நிலக்கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். முந்திரிக்கான மானியத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செ.செங்கமுத்து: ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு காலமதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும். மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். பயிா் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.35-40 வாங்குவதை தடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூா் மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்:இலவச மின்சார இணைப்பிற்காக விவசாயிகளை அழைக்கழிக்க செய்யாமல் உடனடியாக அவா்களுக்கு தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில்,நெல் மூட்டைகளை மாதக் கணக்கில் தேக்கி வைக்காமல் அவற்றை கேப் குடோனுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை அளவீடு செய்து தூா் வார வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி உறுதியளித்தாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com