ஏலாக்குறிச்சியில் 53 அடி உயர அடைக்கல அன்னை சிலை திறப்பு

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை சனிக்கிழமை இரவு திறக்கப்பட்டது.
ஏலாக்குறிச்சியில் திறந்து வைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை.
ஏலாக்குறிச்சியில் திறந்து வைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை.

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை சனிக்கிழமை இரவு திறக்கப்பட்டது.

திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி கிராமத்தில், புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம், இத்தாலியில் பிறந்து, தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் பயின்று, தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழில் பல நூல்களை இயற்றிய வீரமாமுனிவர், தங்கி கட்டிய ஆலயமாகும்.

மேலும், இந்த அடைக்கல அன்னை ஆலயம், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமாகும். இங்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து அன்னையை வணங்கி செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் உள்ள மாதா குளத்தில் உள்ள மண்ணும், தண்ணீரும், அக்கால மன்னர் முதல், இக்காலத்தில் ஆலயம் வரும் பக்தர்கள் வரை அவர்களது பல்வேறு நோய்களை குணமாக்கியுள்ளது என்பது ஐதீகம்.

இந்த மாதா குளத்தில், புனித அடைக்கல அன்னைக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்ற பணி பக்தர்களின் ஆதரவோடு கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கியது. அன்னையின் இந்த வெண்கல சிலை அமைய ஆலயத்துக்கு வரும் பக்தர்களிடமிருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் கிலோ வரையிலான பித்தளை பாத்திரங்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டது.

பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த பித்தளை பாத்திரங்கள் உருக்கி, 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட, 53 அடி உயர சிலை வார்க்கப்பட்டு சனிக்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆலய பங்கு தந்தை சுவக்கின் தலைமை வகித்தார். சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினர் தொல்.திருமாவளவன், அன்னையின் சிலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, குடந்தை மறை மாவட்ட ஆயர் எப்.அந்தோணிசாமி, சேலம் மறை மாவட்ட ஆயர் டி.அருள்செல்வம் ராயப்பன், முன்னாள் பங்கு தந்தை லூர்துசாமி மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் பங்குதந்தையர்கள், துணை பங்கு தந்தையர்கள், திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com