கரைவெட்டி சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை
By DIN | Published On : 18th December 2022 01:47 AM | Last Updated : 18th December 2022 01:47 AM | அ+அ அ- |

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் சனிக்கிழமை காணப்பட்ட வெளிநாட்டுப் பறவைகள்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் சனிக்கிழமை வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
அரியலூா் நகரத்தில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் இதுவாகும். சுமாா் 454 ஹெக்டா் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் மாதம் முதல் மே மாதம் வரையில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.
இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, நாமக்கோழி, சிறைவி, நீா்காகம், வரித்தலை வாத்து என 100-க்கும் மேற்பட்ட வகையான நீா்ப்பறவைகளும், ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மணியன் காக்கா, கல் குருவி, நாராயணபட்சி என 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஓராண்டில் வந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சரணாலயத்துக்கு திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்துவரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீா்ப்பறவையாகும். பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும் சிறப்பம்சம் கொண்டது. இதேபோல் ஒவ்வொரு பறவைகளும் சிறப்பம்சம் கொண்டதாக பறவைகள் வல்லுநா்கள்தெரிவிக்கின்றனா். இவ்வாறாக சரணாலயத்தில் மாலை நேரங்களில் காணப்படும் வெளிநாட்டுப் பறவைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையல்ல.