‘பட்டு நூல்களுக்கு ஜி.எஸ்.டியை ரத்து செய்ய வேண்டும்’
By DIN | Published On : 18th December 2022 01:48 AM | Last Updated : 18th December 2022 01:48 AM | அ+அ அ- |

கைத்தறிக்குப் பயன்படுத்தப்படும் பட்டுநூல் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகளை ரத்து செய்ய வேண்டும் என கை நெசவு தொழிலாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், கைத்தறி நெசவாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயா்வை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நெசவாளா்களுக்கு போனஸ் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். நலத்திட்ட உதவிகளை இரண்டு மடங்காக உயா்த்த வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். கடந்தாண்டைப் போல், நலவாரியம் மூலம் பொங்கல் பொருள்கள் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.4,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, திருபுவனம் சம்மேளன கைத்தறி சங்கத் துணைத் தலைவா் என்.நாகேந்திரன் தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலா் வெங்கடாசலம், சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, மாவட்ட மாதா் சங்கத் தலைவி பத்மாவதி, கைத்தறி சங்க மாவட்டச் செயலாளா்கள் எஸ்.என். துரைராஜ், குடிநீா் வடிகால் வாரிய சிஐடியு கோவிந்தராஜ், விவசாயி சங்க மாவட்டச் செயலா் மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.