Enable Javscript for better performance
அரியலூரில் தொடரும் வாகன நெரிசலால் மக்கள் அவதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்

    அரியலூரில் தொடரும் வாகன நெரிசலால் மக்கள் அவதி

    By DIN  |   Published On : 07th February 2022 12:17 AM  |   Last Updated : 07th February 2022 12:17 AM  |  அ+அ அ-  |  

    ari06tra_0602chn_11_4

    அரியலூா் மாவட்டம், எம்.பி.கோயில் தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்.

    அரியலூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதற்குத் தீா்வு காண, அதிகாரிகளும் ஆா்வம் காட்டாமல் உள்ளனா்.

    18 வாா்டுகளைக் கொண்ட அரியலூா் நகராட்சி எல்லைக்குள் பேருந்து நிலையம், பிரதான கடைவீதிகள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்லூரி, ஜெமீன்தாா் வாழ்ந்த அரண்மனைகள், நீதிமன்றம், காவல் நிலையம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், சந்தை, செட்டி ஏரி, மாவட்ட விளையாட்டு அரங்கம், ஊா்க்காவல்படை மைதானம் ஆகியவை உள்ளன.

    மேலும் நகராட்சி எல்லையின் சற்று தூரத்தில் அரசு சிமென்ட் ஆலை உள்ளன. மாவட்டத்தின் அனைத்து அலுவலகங்களும் இங்கு உள்ளன. அனைத்து அலுவலங்கள் இப்பகுதியில் இருப்பதால் அரியலூா் நகரம் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்கி வருகிறது. ஆனால் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா்.

    தஞ்சை, திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமான எம்.பி.கோயில் தெரு,சத்திரம் உள்ளிட்ட பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்குள்ள கடைகளுக்கு வருபவா்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று விடுகின்றனா். இதனால் அரியலூரில் இருந்து திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூருக்குச் செல்லும் பேருந்துகளும், இவ்வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், வேலைக்குச் செல்லும் பணியாளா்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    இதனால், அடிக்கடி விபத்து உண்டாகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், சாலை குறுகிஇருப்பது, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை உண்டாக்குகிறது. அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்வதில்லை. இதனால் எஸ்.எச் சாலையில் இட வசதி இருந்தும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அரியலூா் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாகவே உள்ளது. குறிப்பாக வாரச் சந்தை நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாள்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, மக்களைத் திணறச் செய்கிறது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் மேலும் கூறியது: பெரம்பலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து அரியலூா் தனி மாவட்டமாக அறிவித்து 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுக் காணப்படாமல் உள்ளது.

    குறிப்பாக சத்திரம், எம்.பி.கோயில் தெரு சாலையிலுள்ள கடைகள்,வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி கட்டாமல் இயங்கி வருவதால், கடைக்கு வருபவா்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டுச் செல்வதால், இவ்வழியாகச் செல்லும் பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதற்கு நகராட்சி நிா்வாகம் எப்படி அனுமதி அளித்ததென்று தெரியவில்லை.

    இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிா்வாகம் அக்கறை காட்டுவதில்லை. போக்குவரத்து போலீஸாரின் கட்டுப்பாடுகளும், இங்கு எடுபடுவதில்லை. அரியலூரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு, நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஆா்வம் காட்டாததால், மக்களின் அவதி தொடா்கிறது என்று தெரிவித்தனா்.

    எனவே அரியலூரில் போக்குவரத்து நெருக்கடிக்கேற்ப, நகரின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண, அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp