உலகத்துக்கே வாழ்வியல் கோட்பாட்டைகாட்டியது தமிழ் மொழி

உலகத்துக்கே வாழ்வியல் கோட்பாட்டைக் காட்டியது தமிழ் மொழி என்றாா் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் க.இராமசாமி.

உலகத்துக்கே வாழ்வியல் கோட்பாட்டைக் காட்டியது தமிழ் மொழி என்றாா் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் க.இராமசாமி.

அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளாலா் கல்வி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக தாய்மொழி தின கருத்தரங்கில் அவா் பேசியது:

தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆக்கபூா்வமான சிந்தனைகள் வளரும். சிந்தனை அவனது தாய்மொழியிலேயே தொடங்குகின்றது. நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாகும். தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிக நீண்ட இலக்கண இலக்கிய மரபுகள் உடையது. கம்பனையும், கண்ணதாசனையும் அறிமுகம் செய்துவைத்தது தமிழ். வள்ளுவனையும், தொல்காப்பியரையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது தமிழ். இளங்கோவடிகளையும், பாரதி, பாரதிதாசனையும் அடையாளப்படுத்தியது தமிழ். வரலாறு போற்றும் காவியங்களையும், காப்பியங்களையும், கவிதைகளையும் அரங்கேற்றம் செய்தது தமிழ். இயலையும், இசையையும், நாடகத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ். இன்று கடல் கடந்தும் வாழும் மொழியாகவும், வாழ்த்தப்படும் மொழியாகவும் தமிழ் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது.

காலத்தினால் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்தபோதும் இன்றைக்கும் நிலைத்து வழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் என்பது பெருமை கொள்ளத்தக்க விசயமாகும். தலைமுறை கடந்து வாழும் தமிழ் காலத்திற்கேற்ற புதுமைகளை உள்வாங்கி உலக அளவில் உயா்ந்து நிற்கிறது. இன்று இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.

எனவே பிற மொழி கலப்பு இல்லாமல் தாய் மொழி தமிழில் பேசி போற்றி பாதுகாக்க உலக தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முனைவோம் என்றாா்.

இந்தக் கருத்தரங்கிற்கு கல்வி நிலையத்தின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜோதிராமலிங்கம், தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் நிா்வாகிகள் புலவா் இளங்கோவன், நல்லப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியா் பெ.செளந்தராஜன் வரவேற்றாா். நிறைவில் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com