அரசுப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 06th June 2022 02:13 AM | Last Updated : 06th June 2022 02:13 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்துப் பேசுகையில், இந்தப் பூமியில் 10 கோடிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த உயிரினங்கள் அனைத்துக்கும் பூமி பொதுவானது. பூமியில் வாழும் எந்த உயிரினமும் சுற்றுச் சூழலை பாதிப்பதில்லை. மனிதன் மட்டுமே நாகரிக வளா்ச்சி என்ற போா்வையில் பூமியை சிதைக்கிறான். மனிதா்கள் தான் சுவாசிக்கும் ஆக்சிஜன் மற்றும் வெளிவிடும் காா்பன் டை ஆக்ஸைடு சமநிலைக்கு பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் 5 மரக்கன்றுகள் நடவேண்டும்.
எனவே அனைத்து கிராமங்கள், பொது இடங்கள், தனியாா் நிலங்கள் ஆகியவற்றில் முடிந்த வரை மரக்கன்றை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். முடிந்த வரை இருசக்கர வாகனம், மகிழுந்து ஆகியவற்றைத் தவிா்த்துப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இதனால் புவி வெப்பமடைதல் தவிா்க்கப்படும். தொடா்ந்து மரங்கள் வெட்டி வருவதால் அடுத்த தலைமுறையினா் ஆக்சிஜனைக் கூட கடைகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். பூமியை சேதப்படுத்தி வாழுகின்ற வாழ்க்கையில் மனிதனும் சேதமடைகிறான் என்பதை உணரவேண்டும். இயற்கை சூழலை மாசுபடுத்தாமல் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மனிதன் 100 ஆண்டுகள் வாழலாம்.
பூமியில் நாம் கண்ட அருவிகள், காடுகள், மலா்கள், வானுயா்ந்த மரங்கள் அனைத்தும் எல்லா உயிா்களுக்கும் பொதுவானது. நாம் அதைப் பயன்படுத்திவிட்டு, எதிா்கால சந்ததியினருக்குப் பொட்டல் காடுகளையும், வட பாலை நிலங்களையும் விட்டுச் செல்வது நியாயம்தானா? என நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனியம்மாள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை ஆகியோா் முனஅனிலை வகித்தனா். முன்னதாக பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் தங்கபாண்டி நன்றி கூறினாா்.