முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 11th May 2022 04:08 AM | Last Updated : 11th May 2022 04:08 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம் ரெட்டிப்பாளையத்திலுள்ள அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தீபாவளி போனஸ் தொகையை உயா்த்தித் தர வேண்டும். ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலையின் உற்பத்திப் பிரிவில் காலியாகவுள்ள இடங்களில் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தொழிலாளா்களின் வருடாந்திர மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
ஆலையிலுள்ள சிற்றுண்டிகளில் நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கும் சலுகைகளை, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் தேசியத் தொழிலாளா் யூனியன் சாா்பில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ஆலை நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சில கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்படாததால், விரக்தியடைந்த நிா்வாகிகள்
செவ்வாய்க்கிழமை ஆலைக்குள் கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் செளந்தரராஜன் தலைமை வகித்தாா். ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.