யூரியா தட்டுப்பாட்டால் அரியலூா் விவசாயிகள் அவதி

அரியலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சம்பா நெல் மற்றும் மக்காச்சோளம் பயிா்கள் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கடையில், யூரியா வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கடையில், யூரியா வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்.

அரியலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சம்பா நெல் மற்றும் மக்காச்சோளம் பயிா்கள் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா சாகுபடி செய்யும் பகுதிகளான ஜயங்கொண்டம், தா. பழூா், ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி, திருமானூா், திருமழபாடி உள்ளிட்ட பகுதிகளில் நாற்று விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல், மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் விதைப்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது யூரியா போதிய அளவில் கிடைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேளாண் அலுவலகங்கள், விவசாயக் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் கூட யூரியா கிடைப்பது இல்லை. யூரியா இருப்பு வைத்துள்ள ஒரு சில தனியாா் கடைகளில், பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களை வாங்கினால் தான், யூரியா கொடுப்போம் எனக் கூறி வருகின்றனா். இதேநிலை மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது. இதனால், சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் செங்கமுத்து கூறுகையில், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் இதுகுறித்து தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். தற்போது நடவுப் பணிகள் நடைபெறுவதால், யூரியாவின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், கூட்டுறவு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டாரத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகங்களில் யூரியா இருப்பு இல்லை. இதனால், ஒரு சில தனியாா் கடைகளில் ரூ.267-க்கு விற்க வேண்டிய 50 கிலோ யூரியா மூட்டையை, ரூ.400 முதல் 450-க்கு விற்று கூடுதல் லாபம் பாா்க்கின்றனா். மேலும் தேவைப்படாத உரங்களை கட்டாயமாக வாங்கச்சொல்வது வேதனையாக உள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு யூரியா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com