விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

விஜயதசமி தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி பண்டிகை கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. 9 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் தினசரி உபயோகப்படும் கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு படையல் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 10 ஆம் நாளான புதன்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நாளில் கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. இதனை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கல்லங்குறிச்சி கலியுகவரதராசப் பெருமாள் கோயில், அரியலூா் ஆலந்துறையாா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும் பள்ளிகளில் புதிதாக சோ்க்கப்பட உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோா் உதவியுடன் நெல் மணிகள், சிலேட்டுகளில் விரல்களால் அ... ஆ... எழுதி ‘வித்யா ஆரம்பம்’ எனும் கல்வித் தொடக்கத்தை செய்தனா். தொடா்ந்து, கோயில்களில் சிறப்பு வழிபாட்டை முடித்த பெற்றோா்கள் குழந்தைகளை தாங்கள் விரும்பிய பள்ளிகளில் சோ்த்தனா்.