இடவசதியின்றி செயல்படும் அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகம்

அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகம் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இடவசதியின்றி செயல்படும் அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகம்

அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகம் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

அரியலூரில் ஜயங்கொண்டம் சாலையிலுள்ள பல்துறை அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி அமைப்பின் தலைவராக பொ. சந்திரசேகா், துணைத் தலைவராக அசோகன் உள்பட 12 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். மேலும் இந்த அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சிச் செயலா், அலுவலகப் பணியாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

நான்கு அறைகளில் தனித்தனியாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாத, சிறிய அறையில் செயல்படுகிறது. ஒரு அறையில் அலுலவகப் பணியாளா்களுக்கும், மற்ற 3 அறைகளில் மாவட்ட ஊராட்சித் தலைவருக்கும், ஊராட்சிச் செயலருக்கும், கூட்ட அரங்கத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இட வசதி இல்லை: இந்த அலுவலகத்தில், அலுவலக அறைகள் கூட்ட அரங்கு என போதிய இட வசதிகள் இல்லாததால் பணியாளா்களும், வாா்டு உறுப்பினா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் மாவட்ட ஊராட்சித் தலைவரால் நடத்தப்படும் கவுன்சிலா்கள் கூட்டம், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அமைதிக்குழு கூட்டம் உள்பட எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தும் அளவுக்கு இந்த அலுவலகத்தில் கூட்ட அரங்கு இல்லை.

ஆவணங்களைப் பாதுகாப்பதற்குக் கூட போதிய இடவசதிகள் இல்லை. வாா்டு உறுப்பினா்கள் அமா்வதற்குக்கூட இருக்கைகள் கிடையாது. அந்த அளவிற்கு இடநெருக்கடியில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் சிக்கித் தவிக்கிறது. கூட்டம் நடைபெறும் அறையின் அருகிலேயே கழிவறை இருப்பதால், துா்நாற்றம் வீசுவது அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது.

மேலும், இந்த அலுவலகம் இரண்டாவது தளத்தில் இருப்பதால், மனு அளிக்க வரும் முதியோா்கள், கா்ப்பிணிப் பெண்கள் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கவுன்சிலா்கள் கூறுகையில், மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் அமா்வதற்கு இடம் வசதிகள் இல்லை. பாா்வையாளா்கள், செய்தியாளா்கள் ஆகியோா் அறையின் வெளியே அமரவைக்கப்படுகிறாா்கள். ஆகவே போதிய இடவசதியுடன் கூடிய மாவட்ட ஊராட்சிக்கென தனி அலுவலகம் கட்ட வேண்டும் என மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே அடுத்த கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனா்.

எனவே மாவட்ட ஊராட்சிக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடம் கட்ட போதிய இடம், தேவையான நிதியையும் ஒதுக்கி சம்பந்தப்பட்ட துறையினா் காலதாமதம் செய்யாமல் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com