21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 9 ஆம் தேதி போராட்டம்
By DIN | Published On : 06th June 2023 01:57 AM | Last Updated : 06th June 2023 01:57 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 9ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 9ஆம் தேதி சென்னையில் மாநில பதிவாளா் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகள், வருவாய்த் துறை நிா்வாகத்திலும், டிஎன்சிஸ்சி நிா்வாகத்திலும், கூட்டுறவுத் துறை நிா்வாகத்திலும் சோ்ந்து பாா்க்கப்படுகிறது. அவ்வாறு பாா்ப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ரேஷன் கடைகளை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரே துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அதேபோல், சரியான எடையில் பொட்டலங்களாக பொருள்களை வழங்க வேண்டும். தற்போது, ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசின் பொருள்கள் என 2 முறை ரசீது போடும் நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஒரே ரசீது முறையை கொண்டு வரவேண்டும். அதேபோல், 4 ஜி முறைகூட இன்னும் ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் ரசீது போடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற முறைகளை மாற்ற வேண்டும் என்ற 21 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை எனில், ஜூன் 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா். உடன், அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயசந்திரராஜா இருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...